பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி15

     ‘‘படா ஸாப்...பச்பன்...தோஸ்த்...’’ என்று ஏதோ சில இந்தி
வார்த்தைகளை உதிர்த்த கூர்க்கா - விறைத்து நின்று ஒரு சலாமும் வைத்து
டாக்ஸியை உள்ளே விட்டு விட்டான். புத்தியுள்ளவர்களாகத் தங்களைக்
கருதிக் கொள்கிறவர்கள் சிந்தித்துக் குழம்பித் தயங்கிக் கொண்டிருக்கிற ஒரு
காரியத்தைப் புத்தி குறைவாகவும் சமயோசித ஞானம் அதிகமாகவும்
உள்ளவர்கள் செய்து முடித்து விடுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுப்போல்
அந்த டாக்ஸி டிரைவர் நடந்து கொண்டதை முத்துக்குமரன் வெகுவாக
ரசித்தான்.

     போர்டிகோவில் டாக்ஸி நின்றதும் மீட்டரில் ஆகியிருந்தபடி பணத்தைக்
கொடுத்து மீதி சில்லறை வாங்கிக் கொண்டு முத்துக்குமரன் தயக்கத்தோடு படி
ஏறினான். முன் ஹாலில் பெரிதாக நடிகன் கோபால் ஒரு புலியை
வேட்டையாடிக் கொன்று துப்பாக்கியும் கையுமாக மிதித்துக் கொண்டு நிற்கும்
லைஃப் சைஸ் படம் அவனை வரவேற்றது.

     பனியனும் லுங்கியும் அணிந்த ஒரு நடுத்தர வயது ஆள் வந்து
முத்துக்குமரனிடம் ‘‘யாரைப் பார்க்கணும்? என்ன வேணும்?’’ என்று
விசாரித்தான். முத்துக்குமரன் தன்னைப் பற்றிய விவரம் கூறியதும், ‘‘இங்கே
உட்கார்ந்திருங்க...’’ என்று ரிஸப்ஷன் ஹாலில் கொண்டு போய் அவனை
உட்காரச் செய்தான். அந்த ஹாலில் முத்துக்குமரன் ஹோட்டலில்
பார்த்ததுபோல் ஏன் அதை விடவும், அழகான கவர்ச்சியான பல பெண்கள்
உட்கார்ந்திருந்தார்கள். தான் உள்ளே நுழைந்ததும் - அவர்களில் பலருடைய
கவனம் தன்மேல் திரும்பியதை அவனும் கண்டான். அந்த அறையில்
நுழைந்ததும் - இருளிலிருந்து திடீரென்று கண்ணைக்கூச வைக்கும்
வெளிச்சத்திற்கு வந்து விட்டது போலிருந்தது முத்துக்குமரனுக்கு. அங்கே
நடிகர் போன்ற தோற்றமுடைய சில இளம் ஆண்களும் காத்திருந்தனர். சிறிது
நேரம்