அப்பருந்து தயாரா, எப்போ வரப்போறீங்கன்னு எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கோம்’’ என்று வாயெல்லாம் பல்லாக எதிர்கொண்டார் கடை முதலாளி. கீழே விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் மடிப்பு மடிப்பாகப் பட்டுப் புடைவைகள் அடுக்கப்பட்டிருந்தன. முத்துக்குமரனும் அவளும் ஜமுக்காளத்தில் அமர்ந்து கொண்டனர். ‘‘சார் தான் எங்க புது நாடகத்தை எழுதிய ஆசிரியர். ரொம்பப் பெரிய படிப்பாளி. பெரிய கவிஞர்’’ என்று மாதவி அவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியபோது, ‘‘போதும்! காரியத்தைப் பார்...’’ என்று அவள் காதருகே முணுமுணுத்தான் அவன். குளிர்ந்த ரோஸ் மில்க் இரண்டு கிளாஸ்களில் அவர்கள் எதிரே கொண்டு வந்து வைக்கப்பட்டது. ‘‘இதெல்லாம் எதுக்குங்க...?’’ என்றாள் மாதவி. ‘‘உங்களைப் போலொத்தவங்க நம்ம கடைக்கு வர்ரதே அபூர்வம்...’’ என்று மோதிரங்கள் அணிந்த கையைக் கூப்பி உபசாரம் செய்யலானார் கடைக்காரர். பட்டு வேஷ்டி, சில்க் ஜிப்பா, வெற்றிலைக் காவியேறிய புன்னகை - பட்டின் வழவழப்பைவிட அதிகம் மென்மையுள்ள முகமன் வார்த்தைகள், ஆகியவற்றோடு கடைக்காரர் அவர்களிடம் மிகவும் நாசூக்காகவும் விநயமாகவும் பழகினார். நிறங்களும், மினுமினுப்பும், கரைகளும், அமைப்பும் ஒன்றையொன்று விஞ்சுகிறாற் போன்ற விதத்தில் புடைவைகள் அவர்களுக்கு முன்னால் குவிக்கப்பட்டன. ‘‘இது உங்களுக்குப் பிடிச்சிருக்கா?’’ என்று கிளிப்பச்சை நிறப் பட்டுப்புடைவை ஒன்றை எடுத்துக் காண்பித்தாள் அவள். ‘‘கிளிகளுக்கு எல்லாம் பச்சை நிறம் |