| ‘‘மாதவி..’’ ‘‘உங்க பேர்கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு.’’ மறுபடியும் அவள் உதடுகளில் புன்னகை தோன்றவும், மறையவும் முயன்றது. முன்புறம் போர்டிகோவில் கார் சீறிப் பாய்ந்துவந்து நிற்கும் ஓசை கேட்டது. காரின் கதவு ஒன்று திறந்து மூடப்பட்டது. அவள் அவனிடம் சொல்லிக் கைகூப்பிவிட்டுத் தன் பழைய இடத்துக்குப் போனாள். ஹாலில் அசாதாரண அமைதி நிலவியது. ‘கோபால் வந்துவிட்டான் போலிருக்கிறது’ என்று முத்துக்குமரனால் ஊகிக்க முடிந்தது. ஃ ஃ ஃ விமான நிலையத்திலிருந்து வந்த கோபால் உள்ளே போய் முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு ரிஸப்ஷன் ஹாலுக்கு வரப் பத்து நிமிஷம் ஆயிற்று. அந்தப் பத்து நிமிஷமும் ஹாலில் இருந்த யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. கண்கள் யாவும் ஒரே திசையில் இருந்தன. எப்படி உட்கார வேண்டுமென்று நினைத்தபடியே திட்டமிட்டு எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். அசாதாரண மௌனம் நிலவியது. ஒவ்வொருவரும் நேர இருக்கும் விநாடிக்குத் தகுந்தவாறு தங்கள் மனம் மொழி மெய்களை மாற்றித் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பேச வேண்டிய வார்த்தைகளும், வாக்கியங்களும் யோசிக்கப்பட்டன. எப்படிச் சிரிப்பது, எப்படிக் கைகூப்புவது என்றெல்லாம் சிந்தித்து உள்ளேயே திட்டமிடப்பட்டன. அரசர் நுழையும் முன்புள்ள கொலு மண்டபம் போல் மரியாதை கூடிய அமைதியாயிருந்தது அந்த ஹால். நண்பன் கோபாலுக்காகத் தானும் அத்தனை செயற்கைகளை மேற்கொள்வதா, வேண்டாமா என்று முத்துக்குமரனின் மனத்தில் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. தானும் இத்தனை அதிகப்படி மரியாதை |