பக்கம் எண் :

20சமுதாய வீதி

பதற்றங்களுடன் நண்பனை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்தானா என்று
தயங்கினான் அவன். நண்பன் தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறான்
என்பதைப் பொறுத்தே தான் அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை
முடிவு செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு. கம்பெனியில் நாடகங்கள்
நடைபெறாத காலத்தில் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு
வந்து மீதியிருக்கும் ஒரே பாயில் இருவராகப் படுத்துத் தானும் கோபாலும்
உறங்கிய பழைய இரவுகளை நினைத்தான் முத்துக்குமரன். அந்த
அந்நியோந்நியம், அந்த நெருக்கம், அந்த ஒட்டுறவு இப்போது அவனிடம்
அப்படியே இருக்கும் என்று தான் எதிர்பார்க்கலாமா, கூடாதா என்பதே
முத்துக்குமரனுக்குப் புரியவில்லை. பணம் மனிதர்களைத் தரம் பிரிக்கிறது.
அந்தஸ்து, செல்வாக்கு, புகழ், பிராபல்யம் இவைகளும் பணத்தோடு
சேர்ந்துவிட்டால் வித்தியாசங்கள் இன்னும் அதிகமாகி விடுகின்றன.
வித்தியாசங்கள் சிலரை மேட்டின் மேலும் சிலரை பள்ளத்திலும்
தள்ளிவிடுகின்றன. பள்ளத்தில் இருப்பவர்களை மேட்டிலிருப்பவர்கள் சமமாக
நினைப்பார்களா? பூகம்பத்தில் சமதரை மேடாகவும், மேடு பள்ளமாகவும்
ஆவதுபோல் பணவசதி என்ற பூகம்பத்தில் சில மேடுகள் உண்டாகின்றன.
அந்த மேடுகள் உண்டாவதனாலேயே அதைச்சுற்றி இருந்த இடங்கள் எல்லாம்
பள்ளமாகிவிட நேரிடுகிறது. பள்ளங்கள் உண்டாக்கப்படுவதில்லை. மேடுகள்
உண்டாகும்போது - மேடல்லாத இடங்கள் எல்லாம் பள்ளங்களாகவே
தெரிகின்றன. மேடுகள், பள்ளங்கள் நேர்கின்றன. கவிதையின் இறுமாப்பும்,
தன்மானத்தின் செருக்கும் நிறைந்த அவன் மனம் கோபாலை மேடாகவும்
தன்னைத்தானே பள்ளமாகவும் நினைக்கத் தயங்கியது. கவிதை விளைகிற
மனத்தில் கர்வமும் விளையும். கர்வத்தில் இரண்டு வகை உண்டு. அழகிய
கர்வம், அருவருப்பான கர்வம் என்று அவற்றைப் பிரிப்பதானால்