பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி207

     அப்துல்லா எழுந்து டேபிளருகே சென்று காக்டெய்ல் மிக்ஸ் செய்யத்
தொடங்கினார். கோபால் மாதவியருகே வந்து, ‘‘ப்ளீஸ்! கீப் கம்பெனி.
இன்னிக்கு மட்டும் அப்துல்லாவே ஆசைப்படறப்ப மாட்டேன்னு சொல்றது
அவ்வளவா நல்லாயிருக்காது!’’ என்று காக்டெய்ல் பார்ட்டியில் அவளையும்
கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தத் தொடங்கினான். மாதவியோ
பிடிவாதமாக மறுத்தாள். அப்துல்லாவோ எதைப்பேசினாலும், எப்போது
பேசினாலும், எப்படிப் பேசினாலும் மாதவியைப் பற்றியே
பேசிக்கொண்டிருந்தார். அவருடைய மனமும், விருப்பமும், நைப்பாசையும்
கோபாலுக்கு நன்றாகப் புரிந்தன. ஆனால் மாதவியோ பிடிவாதமாக அதைப்
புரிந்து கொள்ளாதது போலவே ஒதுங்கி இருந்தாள். அவள் பிடிவாதம் வளர
வளர கோபாலுக்கு அவள் மேல் கோபம் வருவதற்குப் பதில் அவளை
இவ்வளவு மான உணர்ச்சி உள்ளவளாக மாற்றிய முத்துக்குமரன் மேல் தான்
கோபமும் ஆத்திரமும் வந்தது. முத்துக்குமரனைப் போல் தன்மானமும்
பிடிவாதமும் நிறைந்த ஓர் ஆணழகன் வந்து அவளைக் கவர்ந்திருக்கவில்லை
என்றால் மாதவி, தான் சொன்னபடியெல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்
என்பது கோபாலுக்குத் தெரியும்.

     ‘இந்தப் படுபாவி வாத்தியார் வந்த பின்னல்லவா இவ்வளவு மானமும்
ரோஷமும் இவளுக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன’ என்று தனக்குத்
தானே நினைத்துக் கொண்டான் கோபால்.

     மாதவியைக் கொஞ்சம் நெருங்கிப் பழகவிட்டால் அப்துல்லா பணத்தைக்
கொட்டுவான் போலத் தோன்றியது. அப்துல்லாவின் பார்வை பேச்சு எல்லாமே
சபலம் நிறைந்தவையாகத் தோன்றின. எதற்கெடுத்தாலும் ‘மாதவியம்மாவும்கூட
வர்ராங்களில்லே?’’ மாதவியம்மாவுக்கு எப்படி இஷ்டம்?’ - என்று அவளை
மையமாக