பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி215

     மற்ற நடிகர்களையும் பிறரையும் கப்பலிலிருந்து இறங்கச் செய்து
அழைத்து வருவதற்காகப் புறப்பட்ட போது - அப்துல்லாவோ, கோபாலோ,
முத்துக்குமரனை இலட்சியம் செய்யவுமில்லை; வரச்சொல்லிக் கூப்பிடவும்
இல்லை; வர வேண்டாமென்று சொல்லவுமில்லை. மாதவியை மட்டும் ‘புறப்படு
- புறப்படு’ - என்று அவசரப்படுத்தினார்கள்.

     நிலைமை மாதவிக்குப் புரிந்தது. அப்துல்லாவும் கோபாலும் திட்டமிட்டுக்
கொண்டு முத்துக்குமரனை வந்த இடத்தில் அவமானப்படுத்தவோ,
அலட்சியப்படுத்தவோ முயல்வதுபோல் தோன்றியது அவளுக்கு.
முத்துக்குமரனின் ரோஷமும் தன்மானமும் குமுறினால் அதற்கு மேல்
மற்றவர்கள் இருவரும் தாங்கமாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.
ஆனால் முத்துக்குமரன் தன் சுபாவத்தை மீறி அதிகமான அடக்கமும்
அமைதியும் காட்டுவதைக்கண்டு அவளே வியந்தாள். பேசவோ, பழகவோ
யாருமில்லாத புது இடத்தில் முத்துக்குமரனைத் தனியே விட்டுவிட்டுத் தான்
மட்டும் கப்பலில் வருகிறவர்களை எதிர்கொள்ளப் போக விரும்பவில்லை
அவள். தலைவலி என்று சொல்லி வர மறுத்துவிட்டாள். அப்துல்லாவும்
கோபாலும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அவர்கள்
மட்டுமே கப்பலுக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

     மாதவியும் முத்துக்குமரனும் மட்டும் வீட்டிலேயே தங்கி விட்டார்கள்.
அந்தத் தனிமையில் அவனிடம் எப்படி எந்த வாக்கியத்தால் பேச்சைத்
தொடங்குவதென்று தெரியாமல் தவித்தாள் மாதவி. இருவருக்குமிடையே சிறிது
நேரம் மௌனம் நிலவியது.

     ‘‘என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டமும்! நானும்
வந்திருக்கப்படாது, உங்களையும் என்னோட