| இங்கே வந்து இப்படிக் கஷ்டப்பட விட்டிருக்கக்கூடாது...’’ - அவன் பதில் சொல்லவில்லை. தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய ஒவ்வொரு விநாடி மௌனமும் அவளுக்கு வேதனையை அளித்தது. சிறிதுநேர மௌனத்திற்குப் பின், ‘‘கஷ்டம் ஒண்ணுமில்லை! என்னைக் கஷ்டப்படுத்தறதுக்கு இதுவரை மனுஷன் ஒருத்தனும் பிறந்துடலே. ஆனா உன்னைப் போல ஒருத்தி மேலே பிரியம்வச்சு அந்தப் பிரியம் எதிர்த்தரப்பிலேருந்தும் சத்தியமா எனக்குத் திருப்பிக் கிடைக்கறப்ப நான் என்னோட மானம், ரோஷம், கோபதாபம் எல்லாத்தையும் கூட அடக்கிக்க வேண்டியிருக்கு. காதலுக்காக இவ்வளவு பெரிய உரிமைகளை எல்லாம் கூடத் தியாகம் செய்ய வேண்டியிருக்குங்கறதையே இன்னிக்குத் தான் புரிஞ்சிருக்கேன் நான்! அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.’’ ‘‘இந்த விஷயத்தில் அப்துல்லா இவ்வளவு அநாகரிகமா இருப்பார்னு நான் நினைக்கவில்லை...’‘ ‘‘நீ நினைக்காட்டி அதுக்கு யார் என்ன செய்யிறது? அநாகரிகம்தான் இன்னைக்கு முக்கால்வாசி மனுஷனுக்குள்ள இருக்கு. நாகரிகம்தான் போர்வை. தேவைப்பட்ட போது அதை எடுத்துப் போர்த்திக்கிறான் மனுஷன்’’ - என்று விரக்தியோடு அவளிடம் கூறினான் முத்துக்குமரன். கப்பலிலிருந்து இறங்கியவர்கள் வந்து சேர்ந்ததும் நண்பகல் வரை ஓய்வுக்குப் பின் பிற்பகலுக்கு மேல் அவர்கள் எல்லாரும் தனித் தனியே கார்களில் பினாங்கு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். ஆயிரத்தாம் புத்தர் கோயில், பாம்புக் கோயில், பினாங்கு மலைப்பகுதிகள், கடற்கரை ஆகிய இடங்களுக்குப் போனார்கள். |