பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி217

முதல் நாளிரவும் காலையிலும் நடந்தவற்றை நினைத்து முத்துக்குமரன் ஊர்
சுற்றிப் பார்க்கக்கூட வரமாட்டேனென்று மறுப்பானோ என அவள் பயந்தாள்.
ஆனால் அவன் அப்படியெல்லாம் முரண்டு பிடிக்காமல் அமைதியாக உடன்வர
இணங்கியது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. போன இடங்களில்
அங்கங்கே நடிகர்களைப் பார்க்கும் ஆர்வமும் தவிப்புமுள்ள கூட்டம்
அவர்களை மொய்த்தது. கையெழுத்துக்கும் போட்டோவுக்கும் பறந்தார்கள்.
மலைமேல் பல அடுக்குகளைக் கொண்டதாகக் கோபுரம் போல் உயரமாக
அமைந்திருந்தது ஆயிரத்தாம் பகோடா, சுற்றிச் சுற்றி அந்த மலை முழுவதும்
புத்தர் கோவிலாக இருந்தது. கோயில் நிறைய ஊதுபத்தி சாம்பிராணி வாசனை
கமகமத்தது. கைத்தடியின் பருமனுக்கும், உலக்கையின் பருமனுக்கும் ராட்சத
ஊதுபத்திகள் அங்கே பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. போட்டோ - எடுத்து
வேண்டியவர்களுக்கு விற்கும் சீனர்கள் சுறு சுறுப்பாக ஓடியாடிக் கிராக்கிகளைத்
தேடிக் கொண்டிருந்தார்கள். மதுரை - புது மண்டபக் கடைகள் மாதிரியும்,
பழநி மலையேறுகிற பாதை மாதிரியும் - புத்தர் கோவிலுக்குப் படியேறும்
வழியில் இருபுறமும் நெருக்கமாகச் சீனர்களின் கடைகள் இருந்தன.
விளையாட்டுச் சாமான்களிலிருந்து, பிரயோசனப்படுகிற பிரயோசனப்படாத
என்னென்னவோ பண்டங்களெல்லாம் அந்தக் கடைகளில் இருந்தன.
சீனர்களின் உழைப்பும், தொழில் நுணுக்கமும் அந்தக் கடைகளில் தெரிந்தன.

     ஆயிரத்தாம் பகோடா படிகளிலே மேலேறும்போது ஓரிடத்தில் மாதவி
மூச்சுத் திணறித் தள்ளாடினாள். அவள் படிகளில் விழுந்து விடாமல் பின்னால்
தொடர்ந்து படியேறிக் கொண்டிருந்த முத்துக்குமரன் தாங்கிப் பிடித்துக்
கொண்டான்.