| ‘‘செத்துத் தொலைக்காதே! உனக்காக நான் இவ்வளவு சிரமப்படுவது எல்லாம் என்ன ஆவது?’’ என்று தன் இடுப்பில் இறுகும் பிடியோடு காதருகே அவன் மெதுவாகக் கூறிய சொற்கள் - அவள் உணர்வில் தேன் பெய்தது போல் இனிமையாயிருந்தன. அவள் பதிலுக்கு அவனிடம் கேட்டாள்: ‘‘சாவதா? அதுவும் நீங்கள் அருகிலிருக்கும்போதா?’’ இப்படிக் கேட்கும்போது அவளுடைய முகத்தில் மிக நளினமாக மலர்ந்த அந்த அழகிய புன்முறுவலை அவன் மிகவும் இரசித்தான். அதே விதமாக மறுபடி அவள் முகத்தில் ஒரு நளினப் புன்னகையை காணத் தவித்தான் அவன். இப்படி ஒரு புன்னகைக்காக அப்துல்லாவின் அலட்சியம், கோபாலின் பாராமுகம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு. ஆயிரத்தாம் பகோடாவிலிருந்து நேரே பாம்புக் கோவிலுக்குச் சென்றார்கள் அவர்கள். அந்தக் கோவிலில் கதவில், வாயிற்படியில், ஜன்னல் கம்பியில் - எங்கு பார்த்தாலும் பச்சைப் பாம்புகளாக நெளிந்து கொண்டிருந்தன. வராந்தாவில் வைத்திருந்த பூந்தொட்டிகளிலும், குரோட்டன்ஸ் செடிகளிலும், மேல் விட்டத்திலிருந்தும் கூடப் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பழகிய மக்கள் பயப்படாமல் போய்க் கொண்டும், வந்து கொண்டுமிருந்தார்கள். புதிதாகச் சென்றவர்களாகிய அவர்களுக்குத்தான் பயமாக இருந்தது. தைரியசாலிகளாகிய சிலர் அந்தப் பாம்புகளைக் கைகளில் தொங்கவிட்டுக் கொண்டும், கழுத்தில் மாலை போட்டுக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அப்படிப் புகைப்படங்களை எடுத்துக் கொடுப்பதற்கென்றே சில சீனர்கள் அங்கே திரிந்து கொண்டிருந்தனர். படம் பிடித்து முடிந்ததும் படம் எடுத்துக் கொண்டவர் தம்முடைய நிரந்தர விலாசத்தையும், பணத்தையும் கொடுத்து |