பக்கம் எண் :

22சமுதாய வீதி

செய்ய முயன்றது அவன் மனம். அந்தப் பழைய கோபால் வேஷம் கட்டாத
நேரத்திலும் அவனுக்கு முன்னால் நாணிக் கோணிக் கூச்சத்தோடுதான் நடந்து
கொள்வான். ஓர் அடங்கிய சுபாவமுள்ள மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது
போல் முத்துக்குமரனுக்கு அந்த நாட்களில் கோபாலும் கட்டுப்படுவான்.

     ‘நீ பெண் பிள்ளையாகப் பிறந்து தொலைத்திருந்தால் முத்துக்குமாரு
வாத்தியாரையே கட்டிக்கிடலாம்டா கோபாலு’ - என்று சில சமயங்களில் நாடக
சபையின் உரிமையாளரான நாயுடு கிரீன் ரூமுக்குள் வந்து கோபாலைக் கேலி
செய்துமிருக்கிறார். ‘ஸ்திரீ பார்ட்’ வேஷத்தில் கோபால் மிகமிக அழகாக
இருப்பான். வேஷம் கட்டாத நேரங்களில்கூட, ‘நாதா! தங்கள் சித்தம் என்
பாக்கியம்’ - என்று கிண்டலாகக் கோபாலும், ‘தேவி! இன்று இரண்டாவது
ஆட்டம் சினிமாவுக்குச் செல்லலாமா!’ - என்று கேலியாக முத்துக்குமரனும்
பரஸ்பரம் பேசிக் கொள்வதுண்டு.

     - ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் இவற்றை எல்லாம்
இப்போது நினைத்துப் பயன் என்ன?’ என்று உள் மனம் முத்துக்குமரனைக்
கண்டித்தது.

     அபூர்வமானதொரு ‘செண்ட்’டின் வாசனை முன்னே வந்து கட்டியம்
கூற ஸில்க் ஜிப்பாவும் - பைஜாமாவும் அணிந்து கொண்டிருந்த கோலத்தில்
கோபால் உள்ளே நுழைந்தான். அவன் பார்வை ஒவ்வொருவர் மேலும் பதிந்து
மீண்டது. பெண்கள் நாணினாற்போல் நெளிந்தபடி புன்முறுவல் பூத்துக்
கைக்கூப்பினார்கள். ஆண்களும் முகம் மலரக் கைகூப்பினர். முத்துக்குமரன்
ஒருவன்மட்டும் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே கால்மேல் கால்போட்ட
நிலையிலேயே கம்பீரமாக வீற்றிருந்தான். கோபால் கைகூப்புமுன் தான்
எழுந்து நின்று கைகூப்பவோ, பதறவோ அவன் தயாராயில்லை. கோபாலின்
பார்வை இவன் மேல் பட்டதும் அவன் முகம் வியப்பால் மலர்ந்தது.