பக்கம் எண் :

226சமுதாய வீதி

மூண்டு விடவே கோபால் மெல்ல அங்கிருந்து நழுவி விட்டான். மாதவி
முத்துக்குமரனை விடவில்லை.

     ‘‘நீங்களே இப்படி என்னை விட்டுக்கொடுத்துப் பேசினீங்கன்னா அப்புறம்
மத்தவங்க கொண்டாட்டத்துக்குக் கேட்பானேன்?’’

     ‘‘என்ன விட்டுக்கொடுத்துப் பேசிப்புட்டேன் இப்ப? பெரிசாச் சத்தம்
போடறியே! சும்மா ‘உன்னாலேதான் எல்லாம், உன்னலேதான் எல்லாம்’னு
சொல்லிக் காட்டிக்கிட்டிருக்கான் அவன். அதுதான் ‘என்னை ஏண்டா
கூட்டிக்கிட்டு வந்தே’ன்னு கேட்டேன். அதுக்கு நீ ஏன் என்மேலே கோபப்
படணும்னுதான் எனக்குப் புரியலை.

     ‘‘நீங்க வந்திருக்காட்டி நான் என் இஷ்டம் போலத் தாறுமாறாகத்
திரிவேன்னு நெனைச்சுச் சொன்னது போல இருந்திச்சு, அதுதான் நான்
அப்பிடிக் கேட்டேன்...’’

     ‘‘அப்படித் திரியறவள்னு தானே இன்னும் அவுங்க உன்னைப்பத்தி
நெனைச்சுக்கிட்டிருக்கிறதாத் தெரியுது?’’

     ‘‘யார் என்னவேணா நினைக்கட்டும், அதைப்பத்தி எனக்குக் கவலை
இல்லே. ஆனா நீங்க சரியா நினைக்கணும், நீங்களும் என்னைத் தப்பா
நெனைச்சா என்னாலே அதைத் தாங்கிக்க முடியாது.’’

     ‘‘இவ்வளவு நாள் தாங்கிக்கிட்டுத்தானே இருந்திருக்கே...’’

     ‘‘இப்பத் திடீர்னு இப்பிடி நடந்துக்கப் போகத்தானே அவன்
திகைக்கிறான்...?’’ முத்துக்குமரன் இப்படிப் பேசியது பிடிக்காமல் அவள்
அவனுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டுத் தலை குனிந்து கீழே பார்த்தபடி
இருந்தாள்.