பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி229

     ‘‘நீங்க விட்டுக் கொடுத்துப் பேசமாட்டீங்க சார்! ஆனா நான் கவனிச்சுப்
பார்த்துச் சொல்றேன். நமக்குப் பிரியமுள்ளவங்க கீழே சபையில் உட்கார்ந்து
பார்த்தா அது நமக்கு ஒரு ‘டானிக்’ மாதிரி இருந்து வேலை செய்துங்கிறது
உண்மைதான். ஒரு தடவை பாருங்க...விருது நகர் மாரியம்மன்
பொருட்காட்சிக்கு நான் முன்னே வேலை பார்த்த கம்பெனி ட்ரூப்போட
போயிருந்தேன். அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரு. என் அத்தை மகள் -
அதுதாங்க எனக்கு முறைப் பொண்ணு - வந்து நாடகத்தைப் பார்த்துச்சு.
அன்னிக்கு நான் ரொம்ப உற்சாகமா நடிச்சேன்.’’

     ‘‘அது சரிதான்; உனக்கு உன் அத்தைமகள் மேல் காதல் வந்திருக்கும்.’’

     ‘‘அப்படி வாங்க வழிக்கு! அதே மாதிரிதான் மாதவிக்கும் உங்க
மேலே...’’

     - உடனே முத்துக்குமரன் தன்னைப் பார்த்த பார்வையைத் தாங்க
முடியாமல் மேலே சொல்வதைத் தயங்கி நிறுத்திவிட்டான் அந்தத் துணை
நடிகன்.

     அந்தத் துணை நடிகன் சொல்லியதில் உள்ள உண்மையைத் தானே
உணர்ந்தாலும் அவனிடம் ஒரு சிறிதும் மாதவியின் மேல் தனக்குப்
பிரியமிருப்பதைக் காண்பித்துக் கொள்ளாமலே பேசினான் முத்துக்குமரன்.
ஆனால் தன்னுடைய முகம் எதிரே தென்படாமல் இருப்பது அவளுடைய
நடிப்பைப் பாதிக்கத்தான் செய்யும் என்று முத்துக்குமரன் நன்றாக
உணர்ந்திருந்தான். உள்ளூற அந்த உணர்ச்சி இருந்தாலும் மாதவியை
உற்சாகப்படுத்துவதற்காகக்கூட பினாங்கில் முகாம் இட்டிருந்தவரை
நாடகங்களுக்கு அவன் போகவே இல்லை. பினாங்கில் கடைசி நாடகமும்
முடிந்த பின் - பண்டங்கள் அங்கு மிகவும் மலிவு என்பதனால் குழுவில்
ஒவ்வொருவரும் தனியாகவும்,

     ச - 15