| கூட்டமாகவும் ‘ஷாப்பிங்’ போனார்கள். ‘ஃப்ரீபோர்ட்’ ஆகையால் பினாங்குக் கடை வீதிகளில் கைக்கடிகாரங்களின் வகைகளும், நவீன டெரிலீன், ரெயான், டெரிகாட், ஸில்க் துணிகளும், ரேடியோக்களும் கொள்ளை மலிவாகக் குவிந்து கிடந்தன. அப்துல்லாவிடம் அட்வான்ஸ் வாங்கிக் குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு நடிகனுக்கும் நடிகைக்கும் நூறு வெள்ளி பணம் கொடுத்தான் கோபால். முத்துக்குமரனுக்கும், மாதவிக்கும் தலைக்கு இருநூற்றைம்பது வெள்ளிவீதம் ஐந்நூறு வெள்ளியையும் ஒரு கவரில் போட்டு மாதவியிடமே கொடுத்து விட்டான் அவன். முத்துக்குமரனை நேரில் எதிர்க் கொண்டு பேசி அவனிடம் பணத்தைக் கொடுப்பதற்குப் பயமாக இருந்தது கோபாலுக்கு. மாதவியிடம் கொடுத்தபோதே தயங்கித் தயங்கித்தான் அதை வாங்கிக் கொண்டாள் அவள். ‘‘எதுக்கும் அவரிட்டவும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க...நானாப் பணத்தை வாங்கிட்டேன்னு அவர் கோபிச்சாலும் கோபிப்பார்’’ - என்று மாதவி கோபாலிடம் சொல்லியபோது, ‘‘அவர் அவர்னு ஏன் நடுங்கறே? முத்துக்குமார்னு பேரைத்தான் சொல்லித் தொலையேன்’’ என்று கடுமையாக அந்த ‘அவரி’ல் குரலை ஓர் அழுத்து அழுத்தி இரைந்தான் கோபால். - மாதவி இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. கோபால் அவளைக் கடுமையாக உறுத்துப் பார்த்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ஆனாலும் அவளிடம் கடுமையாகப் பேசியது போலவே முத்துக்குமரனை அவன் புறக்கணிக்கத் தயாராயில்லை. மூன்று நாட்களாகத் தனக்கும் அவனுக்கும் இடையே நிலவிய மௌனத்தையும் மனஸ்தாபத்தையும் தவிர்ப்பதுபோல், அவனிடம் போய்ப் பேச்சுக் கொடுத்தான். |