பக்கம் எண் :

24சமுதாய வீதி

     நாடகக் குழுவுக்கான நடிகர், நடிகையர் தேர்தல் தொடங்கியது.
தூரத்தில் சோபாவில் அமர்ந்து விலகியிருந்தபடியே அந்த இன்டர்வ்யூவை
வேடிக்கை பார்க்கலானான் முத்துக்குமரன். மேற்கு நாடுகளில் செய்வது போல்
நெஞ்சளவு, இடையளவு, உயரம் என்று பெண்களை அளக்காவிட்டாலும்,
கோபால் கண்களால் அளக்கும் பேராசையோடுகூடிய அளவையே
முத்துக்குமரனால் கவனிக்க முடிந்தது. ஏதோ நடிப்புக்கு போஸ் கொடுக்கச்
செய்வது போன்ற பாவனையில் சில மிக அழகிய பெண்களை விதவிதமான
கோணங்களில் நிற்கச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தான் கோபால். அந்தப்
பெண்களும் தட்டாமல் அவன் சொன்னபடி எல்லாம் செய்தார்கள். ஆண்களை
இண்டர்வ்யூ செய்ய அவ்வளவு நேரமே ஆகவில்லை. சுருக்கமாக சில
கேள்விகள் - பதில்களோடு ஆண்கள் இண்டர்வ்யூ முடிந்துவிட்டது. தபாலில்
முடிவு தெரிவிப்பதாகச் சொல்லி எல்லாரையும் அனுப்பி வைத்தபின் -
கணவனுக்கு அருகில் அடக்கமாக வந்து அமரும் மனைவியைப் போல்
முத்துக்குமரனுக்கருகே பவ்யமாக வந்து உட்கார்ந்தான் கோபால்.

     ‘‘ஏண்டா கோபாலு! நெஜமாகவே நாடகக் கம்பெனி வைக்கப்
போறீயா?...அல்லது தினசரி குஷாலாக நாலு புதுப் பெண்களின் முகங்களையும்,
அழகுகளையும் பார்க்கலாம்னு இப்படி ஓர் ஏற்பாடா? ஒருவேளை, அந்தக்
காலத்திலே நாடகத்திலே ஸ்திரீ பார்ட் போடப் பெண்களே கிடைக்காம நீ
ஸ்திரீ பார்ட் போட நேர்ந்ததற்காக இப்ப தினம் இத்தினி பேரை வரவழைச்சு
பழி வாங்கறீயா, என்ன? இல்லே...தெரியாமத்தான் கேக்கறேன்?’’

     ‘‘அன்னிக்கி இருந்த அதே கிண்டல் இன்னும் உங்கிட்ட அப்படியே
இருக்கு வாத்தியாரே! அது சரி...! எங்கே தங்கியிருக்கேன்னு இன்னும் நீ
சொல்லவே இல்லியே?’’