| - முத்துக்குமரன் எழும்பூரில் தான் தங்கியிருந்த லாட்ஜின் பெயரைச் சொன்னான். ‘நான் நம்ம டிரைவரைப் போய்ப் பில் பணத்தைக் கட்டிப்பிட்டு உன் பெட்டி படுக்கையை எடுத்தாறச் சொல்லிடறேன். இங்கேயே ஒரு அவுட் ஹவுஸ் இருக்கு - வாத்தியார் அதிலே தங்கிக்கலாமில்லே...?’ ‘‘வாத்தியார் என்னடா வாத்தியார்? நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்னு பழையபடி ஸ்திரீ பார்ட் குரல்லேதான் ஒரு தரம் சொல்லேன். - கோபால் அப்படிச் சொல்ல முயன்று குரல் சரியாக வராததால் பாதியில் நிறுத்தினான். ‘‘உன் குரல் தடிச்சுப் போச்சுடா கோபால்.’’ ‘‘குரல் மட்டுமென்ன? ஆளுந்தான்’’ சொல்லிக் கொண்டே டிரைவரைக் கூப்பிட வெளியே போனான் கோபால். அவனைப் பின் தொடர்ந்து சென்ற முத்துக்குமரன், ‘‘ரூமை நல்லாப் பார்த்து என் ஐசுவரியம் எதையும் விட்டுவிடாமே எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லு. நிகண்டு, எதுகை வரிசைப் புத்தகம் ரெண்டு மூணு இருக்கும்...’’ என்று எச்சரித்தான். ‘‘அதெல்லாம் ஒண்ணு விடாமே வந்து சேரும்; நீ கவலைப்படாதே...’’ ‘‘லாட்ஜ் ரூமுக்கு வாடகைப் பணம் தரணுமே?’’ ‘‘அதை நீ தான் கொடுக்கணுமோ? நான் கொடுக்கப்படாதா வாத்தியாரே?’’ - முத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபாலின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப்பட்டுப் போனான். அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பனை மிகவும் பிரியத்தோடு அணுகி, ‘‘ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து |