பக்கம் எண் :

26சமுதாய வீதி

சாப்பிடணும். ராத்திரி என்ன சமையல் செய்யச்
சொல்லட்டும்?..சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே?...’’

     ‘‘பருப்புத் துவையல், வெந்தயக் குழம்பு, மாங்காய் ஊறுகாய்..’’

     ‘‘சே! சே! அடுத்த பிறவி எடுத்தால்கூட நீ அந்த பாய்ஸ் கம்பெனியின்
நிரந்தர ‘மெனு’வை மறக்கமாட்டே போலிருக்கே...மனித குணங்களாகிய காதல்,
சோகம், வீரம் எதுவுமே நமக்கு உண்டாகி விடாதபடி பத்தியச்
சாப்பாடாவில்லே போட்டுக்கிட்டிருந்தான் அந்த நாயுடு!’’

     ‘‘அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டாலே உனக்கு ‘நல்ல சாப்பாடு’
போடுன்னு நாயுடுவை எதிர்த்துக் கேட்கச் சத்து இருக்காதே.’’

     ‘‘அதுக்காகத்தான் அப்படிச் சாப்பாடு போட்டானா பாவி மனுஷன்?’’

     ‘‘பின்னே? வேறே எதுக்காக? சாப்பிடுகிற சாப்பாடு - நாயுடுவை
எதிர்த்துப் புரட்சி செய்யிற எந்தக் கொழுப்பையும் உனக்குள்ளற
உண்டாக்கிடப் பிடாதுங்கிறது தானே அவரு நோக்கம்?’’

     ‘‘எப்படியோ அதையும் சாப்பிட்டுத்தானே காலங் கடத்தினோம். ஒரு
நாளா ரெண்டு நாளா? ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத்
துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப்
போயிருக்கு?’’

     ‘‘அந்த ஒரு டஜன் வருசத்தை அப்படி அங்கே கழிச்சதிலே
இருந்துதானே இன்னிக்கி இங்கே இப்படி முன்னுக்கு வந்திருக்கோம்.’’

     ‘‘அது சரிதான்! அதை நான் ஒன்னும் மறந்துடலே; நல்லா
நினைவிருக்கு...’’