| -என்று கோபால் கூறியபோது அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். அவன் இதைக் கூறும்போது அவனுடைய கண்கள் எந்த அளவுக்கு ஒளி நிறைந்து தெரிகின்றன என்பதைக் காண முத்துக்குமரன் விரும்பினான். நன்றியுடைமையையும், பழைய நினைவுகளையும் பற்றிய பேச்சு எழுந்தபோது மேலே பேசுவதற்கு எதுவும் விஷயமில்லாமற் போனது போலச் சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. அந்த மௌனத்தின் தொடர்பாகக் கோபால் எழுந்து சென்று சமையற்காரனிடம் இரவுச் சமையலுக்கானவற்றைச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தான். - ஹாலுக்கு அப்பாலுள்ள அறையில் யாரோ ரேடியோவைப் போட்டிருக்க வேண்டும். இனிய வாத்திய இசை ஒலிக்கு முன் பேரில்லாத அநாதி தத்துவத்தில் ஐக்கியமாகி விட்டவர்களாகிய ‘நிலைய வித்வான்களின்’ - காரியம் இது என்று அறிவிக்கப்பட்டது. ‘‘உனக்குத் தெரியுமா வாத்தியாரே? பாய்ஸ் கம்பெனியிலே ‘காயாத கானகம்’ பாடி அப்ளாஸ் வாங்கிக்கிட்டிருந்த கிருஷ்ணப்ப பாகவதரு இப்ப ஏ.ஐ.ஆர்லே நிலையவித்வான் ஆயிட்டாரு.’’ ‘‘ஒரு காலத்திலே சமஸ்தானங்களையும், ஆதீனங்களையும், நாடகக் கம்பெனிகளையும் நம்பிக்கிட்டிருந்த கலைஞர்களுக்கு இப்ப ரேடியோதான் கஷ்ட நிவாரண மடமாயிருக்கும் போலத் தெரியுது....?’’ ‘‘நான்கூட ஒரு நாடகக் கம்பெனி ஸ்டார்ட் பண்ணப் போறேன். நம்மை அண்டிக்கிட்டிருக்கிறவங்களுக்குச் சோறு துணி குடுக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு...’’ ‘‘இப்ப பண்ணின ‘இண்டர்வ்யூ’ எல்லாம் அதுக்குத் தானே!’’ |