எனக்கு அதிலே பொறாமையின்னு அர்த்தமில்லை. அவ வரக்கண்டுதான் நான் பிழைச்சேன்...’’ ‘‘இல்லேன்னா?’’ ‘‘.........’’ அவள் பதில் சொல்லவில்லை. அவ்வளவு கடுமையாக அவளைக் கேட்டிருக்கக்கூடாதென்று அவனும் அந்தப் பேச்சை அவ்வளவிலேயே நிறுத்தினான். தான் அப்படிக் கடுமையாகப் பேசும் ஒவ்வொரு தடவையும் அவள் தனக்கு முன் மௌனம் சாதிப்பதைப் பார்த்து அவனுக்கே அவள் மேல் உள்ளூறக் கருணை சுரந்தது. நிராயுதபாணியாக எதிரே நிற்கும் பலவீனமான எதிரியை ஆயுதங் கொண்டு துன்புறுத்தியதைப் போல உணர்ந்தான் அவன். அவனும் மாதவியும் எதிர்பாராமலே கோலாலும்பூரில் அவர்களுக்கு ஒரு வசதி கிடைத்தது. அப்துல்லாவும் உதயரேகாவும், கோபாலும் மரீலின் ஹோட்டல் என்ற முதல்தரமான உல்லாச ஹோட்டலில் தங்கிக் கொண்டு மற்றவர்களை வேறோர் இடத்திலிருந்த சாதாரணமான ‘ஸ்டேிரேயிட்ஸ் ஹோட்டலில் தங்கச் செய்தனர். ஏற்பாடு செய்யுமுன் கோபால் மாதவியைக் கேட்டான். ‘‘உனக்கு ஆட்சேபணையில்லேன்னா நீயும் எங்ககூட மரீலின் ஹோட்டல்லே தங்கலாம். ஆனா வாத்தியாருக்கும் சேர்த்து இங்கே ஏற்பாடு செய்ய முடியாது.’’ ‘‘அவசியமில்லை! நான் இங்கே தங்கல்லே. அவர் தங்கற இடத்திலேயே நானும் தங்கிக்கிறேன்’’...என்றாள் மாதவி. உயரமான கட்டிடங்களும், சீன எழுத்திலும், மலாய் எழுத்திலும், ஆங்கிலத்திலுமாக மின்னும் நியான்ஸைன் விளக்குகளுமாகக் கோலாலும்பூர் முற்றிலும் புதியதொரு தேசத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை அவர் |