பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி245

துக்கு ஒருதரம் ஆறுமாதம் ஊர்போய் வருவதாகவும் தெரிவித்தார் ரெட்டியார்.
புது தேசத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தெரிந்த மனிதரைச் சந்தித்தது
மிகவும் இன்பமாயிருந்தது. மாதவியை அவருக்கு அறிமுகம் செய்து
வைத்ததோடு தான் சென்னைக்கு வந்து கோபால் நாடகக் குழுவில்
இருப்பதையும் தெரிவித்தான் முத்துக்குமரன்.

     ‘‘மெல்ல சினிமாவுக்கு ஏதாவது எழுதப் பார்க்கக் கூடாதோ? சினிமாதான்
இன்னிக்குக் கை நிறையக் காசு தரும்’’ - என்று எல்லாரும் வழக்கமாகக்
கூறுவதையே ரெட்டியாரும் கூறினார், அதைக் கேட்டு முத்துக்குமரனுக்குச்
சிரிப்புத்தான் வந்தது. சிரித்துக்கொண்டே அவருக்குப் பதில் கூறினான் அவன்:

     ‘‘சினிமா எங்கே ஓடிப்போறது? பார்த்துக்கலாம்.’’

     ‘‘சரி! நாளை மத்தியானம் உங்க ரெண்டு பேருக்கும் நம்ம வீட்டிலே
சாப்பாடு. பெட்டாலிங்ஜெயாவுக்கு வந்துடுங்க...அது சரி; எங்கே
தங்கியிருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே?’’

     ‘‘ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டல்லே இருக்கோம். சாப்பாடு பலகாரம்லாம்
அம்பாங் ஸ்ரீட்லேருந்து கொண்டாந்து தராங்க...’’

     ‘‘நம்ம வீட்டிலேயே வந்து தங்கிடுங்களேன்.’’

     ‘‘அது முடியாது! நாடகக் கம்பெனி ஆட்கள் எல்லாரோடவும் சேர்ந்து
தங்கியிருக்கோம். தனியாப் போறது நல்லாயிருக்காது. விடவும் மாட்டாங்க...’’

     ‘‘சரி! ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்கு நாளை மத்தியானம் கார்
அனுப்பறேன். வந்துடுங்க’’ - என்று கூறிவிட்டு விடை பெற்றுக்கொண்டு
போய்ச் சேர்ந்தார்

     ச - 16