ருத்ரபதி ரெட்டியார். .அவர் சென்ற பின்பு சிறிது நேரம் அவரைப் பற்றியும் மதுரையில் பத்து வருடங்களுக்கு முன் அவரோடு பழக நேர்ந்தது பற்றியும் அவருடைய குணாதிசயங்கள் பற்றியும் சிறிது நேரம் மாதவியிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தான் முத்துக்குமரன். பத்து மலையிலிருந்து அவர்கள் திரும்பி ஹோட்டலுக்கு வந்தபோது எதிர்பாராத விதமாகக் கோபால் அங்கே வந்திருந்தான். ‘‘என்ன வாத்தியாரே! இந்த ஹோட்டல்லே எல்லாம் வசதியா இருக்கா? ஏதாவது வேணும்னாச் சொல்லுங்க. நான் வேறே எடத்துலே தங்கிட்டேன்கிறதுக்காக உங்க குறைகளைச் சொல்லாம விட்டுடப்பிடாது-’’ என்று ஒரு டிரேட் யூனியன் லீடரிடம் அவனுடைய குறைகளைத் தொழில் நடத்துகிறவன் கேட்பது போல் கேட்டான் கோபால். உண்மைப் பிரியமில்லாமல் ஓர் உபசாரத்துக்காகக் கேட்கப்படும் அந்த வார்த்தைகளை முத்துக்குமரன் ஸீரியஸாக எடுத்துக்கொள்ளவுமில்லை; பதில் சொல்லவுமில்லை. அவன் போன பிறகு மாதவி முத்துக்குமரனிடம் கேட்டாள்: ‘‘விசாரிக்கிற லட்சணத்தைப் பார்த்தீங்களா? உதட்டிலே கூட ஒட்டாமே வார்த்தைகளைப் பேசறாரு...’’ ‘‘விட்டுத்தள்ளு அவன் பேச்சை, நாம எல்லாம் இங்கே அவனைப் பத்தி என்னென்ன பேசிக்கிறோமேன்னு திடீர்னு பயம் வந்திருக்கும். அந்தப் பயத்திலே பார்த்திட்டுப் போகலாம்னு வந்திருப்பான்.’’ ‘உதயரேகாதான் இந்தப் பக்கம் தலையையே காட்டலே, ஒரேயடியா அப்துல்லாகிட்டவே இருந்துட்டா...’’ ‘‘அப்துல்லா விட்டால்தானே?’’ மாதவி இதைக் கேட்டுச் சிரித்தாள். |