பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி249

     ‘‘சும்மா வாங்கிக்க. ரெட்டியார் நம்ம அண்ணன் மாதிரி. அவரிட்ட நாம
வித்தியாசம் பாராட்டக்கூடாது.’’

     அவள் வாங்கிக் கொண்டாள். கடிகாரத்தை ரெட்டியாரே
முத்துக்குமரனின் கையிலே கட்டி விட்டார்.

     ‘‘ஏதோ கடவுள், புண்ணியத்திலே இங்கே கடல் கடந்து வந்து நல்லா
இருக்கோம். நல்லா இருக்கறப்ப நமக்கு வேண்டியவங்களை மறந்துடப்பிடாது’’
என்ற ரெட்டியார் கூறினார்.

     ‘‘மாதவி! ரெட்டியார் இப்ப இப்பிடி இருக்காரேன்னு நினைக்காதே.
மதுரையிலே இருக்கறப்ப நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சிநேகிதம். கவிராயர்
குடும்பத்திலே பிரியம். எங்க நாடக சபா நாயுடுவுக்கு அந்தக் காலத்திலே
இவருதான் வலது கை.’’

     ‘‘அப்படின்னா இவருக்குக் கோபால் சாரையும் நல்லாத்
தெரிஞ்சிருக்கணுமே?’’

     ‘‘தெரியும் அம்மா? ஆனா, அவரு, இப்ப உச்சாணிக் கொம்பிலே
இருக்காரு. இந்த தேசத்திலேயே பெரிய வைர வியாபாரி அப்துல்லாவோட
‘கஸ்ட்டா’ வந்து தங்கியிருக்காரு. நம்மைப் போலொத்தவங்களை மதிப்பாரோ,
மாட்டாரோ? மரீலின் ஹோட்டலுக்குப் போறதுன்னாலே பயம். அங்கே
டவாலியிலிருந்து, வெயிட்டர்வரை அத்தினிபேரும் இங்கிலீஷ்லேதான்
பேசுவாங்க. எனக்கோ இங்கிலீஷ்னாலே பயம். பேசவும் வராது. கேட்கவும்
புரியாது...’’

     ‘‘என்னை மாதிரீன்னு வச்சுக்கயேன்...’’ என்று முத்துக்குமரன்
மாதவியிடம் குறுக்கிட்டுக் கூறினான்.

     ‘‘பழகினாத் தானே வந்திட்டுப் போகுது.’’