| மேற் பகுதியோடு டாக்ஸிகள் விரைந்து கொண்டிருந்தன. இரவு உணவுக்கு எல்லாரும் சிரங்கூன் ரோடிலிருந்த கோமளவிலாஸ் சைவக் கடைக்குப் போய்விட்டு வந்தார்கள். இம்முறை கோபாலும் அவர்களுடனேயே தங்கிவிட்டான். அப்துல்லாவும் உதயரேகாவும் மட்டுமே காண்டினெண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். சிங்கப்பூர் நாடகங்களில் எல்லாம் கோபால்தான் நடித்தான். சிங்கப்பூர் நாடகங்களிலும் நல்ல வசூல் ஆயிற்று. கடைசி இரண்டு தினங்கள் மட்டும் வசூல் கொஞ்சம் சுமாராக இருந்தது. மழை வந்து கெடுத்துவிட்டது. ஆனாலும் நஷ்டம் எதுவுமில்லை என்றார் அப்துல்லா. சிங்கப்பூரிலும் அவர்கள் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். ஜு ரோங் தொழில் பேட்டை, டைகர்பாம் கார்டன்ஸ், குவின்ஸ்டவுனின் உயரமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் பார்த்தார்கள். டைகர்பாம் தோட்டத்தில், சீனப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உலகில் பாவம் செய்தவர்கள் எப்படி எப்படி எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிப் பல குரூரமான காட்சிகளைச் சுதை வேலைச் சிற்பங்களால் நெடுகச் சித்தரித்திருந்தார்கள். பாவம் செய்த ஒருவனை நரகத்தில் ரம்பத்தால் அறுப்பது போலவும், தலையில் இரும்பு ஆணிகளை அறைவது போலவும், நெருப்புக் கொப்பரையில் நிர்வாணமாகத் தூக்கிப்போடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே முத்துக்குமரன், ‘‘மெட்ராஸிலே இருக்கிற அத்தினி சினிமாக்காரங்களையும் கூட்டியாந்து இந்தக் காட்சிகளை அடிக்கடி காமிக்கணும் மாதவி?’’ என்றான். ‘‘வேண்டியதில்லை...’’ ‘‘ஏன் அப்படிச் சொல்றே?’’ ‘‘ஏன்னா இதெல்லாம் அங்கேயே தினம் தினம் நடந்துக்கிட்டிருக்கு!...’’ |