அவற்றை எடுத்து உள்ளே வைத்தார்கள். கோபால் என்ன நினைத்துக்கொண்டாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று மாதவி முத்துக்குமரனோடு அவுட்ஹவுஸிலேயே தங்கிவிட முடிவு செய்தாள். முத்துக்குமரன் விரிப்பையும் தலையணையையும் அவளுக்குக் கொடுத்துவிட்டுக் கட்டிலில் இருந்த வெறும் மெத்தையைில் படுத்தான். மாதவி கீழே விரித்துப் படுத்தாள். ‘‘இந்தாங்க ஒரு தலையணைதான் இருக்கு போலிருக்கே, எனக்கு வேண்டாம், நீங்களே வச்சுக்குங்க...’’ என்று மாதவி சிறிது நேரம் கழித்துத் தலையணையைக் கொடுப்பதற்காக அவனருகே வந்தாள். அவன் இலேசாகத் தூங்கத் தொடங்கியிருந்தான். அப்போது டெலிபோன் மணி வேறு அடித்தது. தான் எடுக்கலாமா, கூடாதா என்று மாதவி தயங்கி நின்றாள். முத்துக்குமரன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து டெலிபோனை எடுத்தான். எதிர்ப்புறம் கோபால் பேசினான். 20 குரலிலிருந்து கோபால் நன்றாகக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது. ‘‘மாதவி அங்கே இருக்காளா? வீட்டுக்குப் போய்விட்டாளா?’’ சொற்கள் குழறின. கோபாலுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் டெலிபோனை அப்படியே மாதவியின் காதருகே வைத்தான் முத்துக்குமரன். அதே கேள்வி குழறலாக அவள் காதிலும் ஒலித்தது. அவள் முகத்தில் பழைய பயம் இன்னும் இருக்கிறதா என்று கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். கவனித்தபடியே அவளை வினவினான்: ‘‘என்ன பதில் சொல்லட்டும்? முன்னே நாம ரெண்டு பேரும் சேர்ந்து பீச்சுக்குப் போனன்னிக்கி, ‘பீச்சுக்குப் போனதெல்லாம் அங்கே ஒண்ணும் சொல்ல வேண்டாம்’னு கோபாலுக்கு நடுங்கினியே; அப்பிடியேதான் |