வில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது. லாட்ஜிலிருந்து காலி செய்து சாமான்களை எடுத்து வந்து விட்டதாக டிரைவர் வந்து தெரிவித்தான். ‘‘கொண்டுபோய் அவுட் ஹவுசிலே வை. நாயர்ப் பையனைக் கூப்பிட்டுகிட்டு போய் அவுட் ஹவுஸ் பாத்ரூமிலே டவல், சோப், எல்லாம் வைக்கச் சொல்லு. ‘வாத்தியாரு’ சௌகரியமா இருக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்யச் சொல்லு.’’ டிரைவர் சரி என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தான். மறுபடி ஏதோ நினைவு வந்தவன்போல் கோபால் அவனைக் கூப்பிட்டான். ‘‘இந்தா உன்னைத்தானே! அவுட் ஹவுசிலே வெந்நீருக்கு வசதியில்லைன்னா உடனே ‘ஹோம் நீட்ஸ்’ கம்பெனிக்கு ஃபோன் பண்ணி ஒரு ‘கெய்ஸர் ப்ளாண்ட்’ கொண்டாந்து பிக்ஸ் பண்ணச் சொல்லு.’’ ‘‘இப்பவே ஃபோன் பண்றேன் சார்.’’ டிரைவர் போனதும் மீண்டும் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தான் கோபால். ‘‘முதல் நாடகத்தை நீதான் கதை - வசனம், பாட்டு உள்படத் தயாரிச்சுக் கொடுக்கணும் வாத்தியாரே?’’ ‘‘நானா? இதென்னப்பா வம்பா இருக்கு? எத்தினியோ புகழ்பெற்ற நாடகாசிரியருங்கள்ளாம் மெட்ராஸ்லே இருக்காங்க? என்னை யாருன்னே இங்கே யாருக்கும் தெரியாது. எம்பேரைப் போட்டா எந்த விளம்பரமும் ஆகாது! நான் எழுதணும்னா சொல்றே?’’ என்று கோபாலின் மன |