கத்தியிருப்பான். ஆனால் முத்துக்குமரனிடம் ஓர் அடங்கிய மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் கட்டுப்பட்டான் அவன். சிறிது நேரம் நண்பனுக்கு என்ன பதில் சொல்வதென்பது தெரியாமல் திகைத்தான் அவன். கோபமாகப் பேசமுடியவில்லை. குணமாகப் பேசவும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நல்ல வேளையாக முத்துக்குமரனே முகம் மலர்ந்து புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினான். ‘‘கவலைப்படாதே கோபால்! உன்னுடைய அகங்காரத்தை ஆழம் பார்க்கத்தான் அப்படிப் பேசினேன். உனக்கு நான் நாடகம் எழுதுகிறேன். ஆனால், அது நீ நடிக்கிற நாடகம் என்பதை விட நான் எழுதிய நாடகம் என்பதையே நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.’’ ‘‘அதனால் என்ன? நீ பெருமை அடைந்தால் அதில் எனக்கும் உரிமை உண்டு வாத்தியாரே.’’ ‘‘முதல் நாடகம் - சமூகமா? சரித்திரமா?’’ ‘‘சரித்திரமாகவே இருக்கட்டும்! ராஜேந்திரசோழனோ சுந்தரபாண்டியனோ எதுவேணா இருக்கட்டும். அதுலே நடுநடுவே பார்க்கிறவங்க கைதட்டறாப்பல சில டயலாக்ஸ் மட்டும் கண்டிப்பா வேணும்! நீங்க சரித்திரத்திலே எந்த ராஜாவை எழுதினாலும் இது வேணும்! எம் மன்னர் காமராஜர், கன்னியர் மனங்கவரும் அழகுக் கொண்டல், இரப்போர்க்குக் கருணாநிதி, இளைஞர்க்குப் பெரியார், தம்பியர்க்கு அண்ணா - என்பதுபோல அங்கங்கே வசனம் வரணும்.’’ ‘‘அது முடியாது’’ ‘‘ஏன்? ஏன் முடியாது?’’ ‘‘ராஜராஜசோழன் காலத்தில் இவங்களளாம் இல்லை. அதனாலே முடியாது’’ ‘‘மாஸ் அப்பீலா இருக்கும்னு பார்த்தேன்.’’ ‘‘இப்படி எழுதினா மாஸ் அப்பீல் என்பதைத் திருத்தி ‘‘மாசு அப்பீல்’’னுதான் சொல்லணும்.’’ |