| னைத் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. தலைப்பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி விளக்கைப் போட்டுவிட்டு டெலிபோனை எடுத்தான் முத்துக்குமரன். எதிர்ப்புறம் ஓர் இனிய பெண் குரல் - பயமும், நாணமும் கலந்த தொனியில் ‘ஹலோ’ என்று இங்கிதமாக அழைத்து, ‘என்னை நினைவிருக்கிறதா? என்று வினாவியது. அந்தக் குரலை நினைவிருந்தாலும் அப்போதிருந்த நிலையில் யாரென்று பிரித்து நினைவுகூர முடியாமலிருந்தது. அவன் பதில் சொல்லத் தயங்கினான். அவளே தொடர்ந்து ஃபோனில் பேசினாள். ‘‘...மாதவி...இண்டர்வ்யூக்கு முன்னால் உங்களோடு பேசிக்கொண்டிருந்தேனே; நினைவில்லையா?’’ ‘ஓ...நீயா...?’’ - போதையில் ஏகவசனமாக ‘நீ’ என்று வந்துவிட்டது. ஓர் அழகிய சமவயதுப் பெண்ணிடம் அவள் யௌவனத்தையும், பிரியத்தையும் அவமானப்படுத்துவது போல் ‘நீங்கள்’, ‘உங்கள்’ - என்று பேச முடியாதவனாக அவன் அப்போது இருந்தான். அவன் பருகியிருந்த மதுவைக் கசப்பாக்குவது போல் டெலிபோனில் அவள் குரல் இங்கிதமாய் நளினமாய்த் தேனாகப் பெருகி வழிந்தது. ‘‘மன்னிக்கணும்...நீங்களா...?’’ - என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவன் உரையாடலை மறுபடி தொடர்ந்தபோது, ‘‘முதல்ல கூப்பிட்டாப்பிலேயே கூப்பிடலாம்! அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...’’ என்று எதிர்ப்புறம் அவள் குரல் ஒய்யாரமாய்க் குழைந்தது. அந்தக் குழைவு, அந்த இங்கிதம், எல்லாம் சேர்ந்து முத்துக்குமரனை மேலும் மேலும் கர்வப்பட வைத்தன. வலிய அணைக்கும் சுகம் போலிருந்தது அவளுடைய பேச்சு. |