பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி37

போய் விட்டது. அன்றிரவு மிக இனிய கனவுகளுடனே உறங்கினான் அவன்.
விடிந்தபோது மிகவும் அவசர அவசரமாக விடிந்துவிட்டது போலிருந்தது.
நாயர்ப்பையன் பெட்காபியோடு வந்து எழுப்பிய பின்புதான் அவன்
எழுந்திருந்தான். வாயைக் கொப்பளித்துவிட்டுச் சூடான காபியைப் பருகினான்.
மனநிலை மிக மிக உற்சாகமாகவும், உல்லாசமாகவும் இருந்தது. அவுட்ஹவுஸின்
வராந்தாவில் வந்து நின்று எதிரே தோட்டத்தைப் பார்த்தபோது அது மிகவும்
அழகாக இருந்தது. பனியில் நனைந்த ஈரப் புல்தரை மரகத விரிப்பாகப் பசுமை
மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பசுமைக்குக் கரை கட்டினாற் போல் சிவப்பு
ரோஜாப்பூக்கள் பூத்திருந்தன. இன்னொரு மூலையில் புல்தரையில் பூக்களை
உதிர்த்துவிட்டு - அப்படி உதிர்த்த தியாகத்தோடு நின்று கொண்டிருந்தது
பவழ மல்லிகை. எங்கிருந்தோ ரேடியோ கீதமாக - ‘‘நன்னு பாலிம்ப’’...வில்
மோகனம் காற்றின் வழியே மிதந்து வந்தது.

     எதிரே தெரிந்த தோட்டமும் காலை நேரத்தின் குளுமையும் அந்தக்
குரலின் மோகன மயக்கமும் சேர்ந்து முத்துக்குமரனை மனம் நெகிழச் செய்தன.
அந்த நெகழ்ச்சியின் விளைவாக மாதவியின் நினைவு வந்தது. முதல் நாளிரவு
அகாலத்தில் டெலிபோனில் ஒலித்த அவள் குரலும் நினைவு வந்தது. சிலர்
பாடினால்தான் சங்கீதமாகிறது. இன்னும் சிலரோ பேசினாலே
சங்கீதமாயிருக்கிறது. மாதவிக்கோ வாய் திறந்து பேசினாலே சங்கீதமாயிருக்கிற
குரல். குயில் ஒவ்வொரு கூவலாகக் கூவுவதற்காக அகவுவதுபோல் சொற்களை
அகவி அகவிப் பேசினாள். அவள், அவளுடைய குரலைப் புகழ்ந்து ஒரு
கவிதை பாடிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது அவனுக்கு.

     ச - 3