பக்கம் எண் :

46சமுதாய வீதி

இந்த நாடகம் அட்வான்ஸாக இருக்க வேண்டுமென்று அவனுக்கே தோன்றியது.
அதனால்தான் அவன் திரும்பத் திரும்ப அந்த நாடகத்தைப் பற்றிச்
சிந்தித்தான். நாடகமோ, வசனமோ, பாடல்களோ எழுதுவது அவனுக்குக்
கைவந்த பழக்கம்தான் என்றாலும் அந்தப் பழக்கத்தை ஒரு புதிய உலகுக்குப்
பயன்படுத்திக் காண்பித்து வெற்றிபெற வேண்டியவனாகத் தான் இருப்பதை
இப்போது அவன் உணர்ந்திருந்தான். சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் அதுதான்
காரணமாக இருந்தது. பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக நண்பன் மூலம்
இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லையாயினும்
- கிடைத்த வாய்ப்பை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்பதில் இப்போது
அக்கறை பிறந்தது. அது சம்பந்தமான திட்டங்களை மனத்தில் போடத்
தொடங்கினான் அவன்.

     காலை ஒன்பதரை மணிக்கு நாயர்ப் பையன் - இட்டிலியும் காபியும்
கொண்டு வந்து வைத்துவிட்டு ‘‘சார்! உங்க ‘‘ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி’’ -
என்றான்.

     ‘‘ஐயா இருக்காரா! ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டுப் போயிட்டாரா?’’ -
என்று அவனிடம் விசாரித்தான் முத்துக்குமரன்.

     ‘‘இன்னும் புறப்படலே! பத்து நிமிசத்திலே புறப்பட்டிடுவாரு’’ - என்று
பதில் கிடைத்தது. ‘‘சாருக்கு எது வேணும்னாலும் உடனே செய்யச் சொல்லி
ஐயா உத்திரவு போட்டிருக்கு’’ - என்று முத்துக்குமரன் கேட்காத ஒன்றையும்
சேர்த்துத் தன் மறுமொழியில் கூறினான் பையன்.

     முத்துக்குமரன் சிற்றுண்டியை முடித்துவிட்டு காபி அருந்திக்
கொண்டிருக்கும்போது ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து
கோபால்தான் கூப்பிட்டுப் பேசினான்.