| ‘‘நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன் வாத்தியாரே! எது வேணும்னாலும் பையனிட்டக் கூச்சமில்லாமக் கேட்டுக்கலாம். ஸ்டூடியோவிலிருந்து அப்புறம் ஃபோன் பண்றேன்...நாடகம்...ஜல்தி தயாராகட்டும்...’’ ‘‘அது சரி! இதென்னமோ கவர்லே போட்டு அனுப்பிச்சிருக்கியே, இதுக்கென்ன அர்த்தம்னு புரியலியே! உங்கிட்ட நிறைய இருக்குங்கறதை எனக்குக் காமிக்கிறியா?’’ ‘‘சே; சே! எதையாவது உளறாதே வாத்தியாரே...சும்மா கைச் செலவுக்கு இருக்கட்டும் வச்சுக்க...’’ ‘‘வெள்ளைத் தாளா இருந்தாலும் கவிதை எழுதலாம். ரூபாய் நோட்டாவில்ல இருக்குது இது?’’ என்று முத்துக்குமரன் பதில் கூறியதைக் கேட்டு எதிர்ப்புறம் கோபால் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். உரையாடல் முடிந்தது. கோபால் படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டான். முத்துக்குமரனுடைய மனநிலை, அகம்பாவம் எல்லாம் கோபாலுக்கு நன்றாகத் தெரியுமாதலால் ‘‘படப்பிடிப்புப் பார்க்க வா - ஸ்டூடியோவைச் சுற்றிப் பார்க்க என் கூட வா’’ - என்றெல்லாம் உபசாரத்துக்காகக் கூட அவனைக் கூப்பிடவில்லை. சாதாரணமாக வெளியூரிலிருந்து முதல் தடவையாகப் பட்டினத்துக்கு வருகிறவன் ஒரு சினிமா ஸ்டூடியோவைப் பார்க்க வேண்டுமென்பதை எவ்வளவு பெரிய ஆர்வமாகக் கொண்டிருப்பானோ அவ்வளவு பெரிய ஆர்வமாக முத்துக்குமரன் அதைக் கொண்டிருக்க மாட்டான் என்பது கோபாலுக்குத் தெரியும். - பகல் பன்னிரண்டு மணிக்குள் பேசுவதற்கு விஷயத்துடனோ, விஷயமின்றியோ, மாதவி நான்கைந்து முறை முத்துக்குமரனுக்கு ஃபோன் செய்துவிட்டாள்... - மதுரையில் இருந்தவரை டெலிஃபோன் என்ற கருவியை இப்படி இத்தனை விதமாக இத்தனை அவசிய |