| கென்று பேசும்போது அழகாயிருந்தாள். நாணித் தலைகுனியும் போதும் அழகாயிருந்தாள். பாடும்போதும் அழகாயிருந்தாள். மௌனமாயிருக்கும்போதும் அழகாயிருந்தாள். ‘இன்னிக்கு நீங்க ரொம்ப நல்லாப் பேசினீங்க’ - என்று அவளும் அவனைப் புகழத் தொடங்கியபோது, ‘என்னிக்குமே நான் பேசறது நல்லாத்தான் இருக்கும்’ - என்று அகங்காரத்தோடு பதில் சொன்னான். அவள் குறுக்கிட்டாள்: ‘‘நான் கேக்கறது இன்னிக்குத்தானே?’’ ‘‘வேணும்னா இனிமே - நீ கேக்கறப்பல்லாம் பேசறேன் போதுமா?’’ அவள் சிரித்தாள். மின்னும் அந்தப் பல் வரிசையின் நிறத்திலும், மெருகிலும் அவன் வசமிழந்து கிறங்கினான். இப்படிப்பட்ட பெண்ணழகை இதற்குமுன் காவியங்களின் வர்ணனைகளில்தான் அவன் கண்டிருக்கிறான். கோபால் அவனருகே வந்தான். ‘‘நாடகம் இனிமே நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிதான்...’’ ‘‘ஏன்? அதெப்படி இப்பவே நீ சொல்ல முடியும்...?’’ ‘‘வந்தவங்க சொல்றாங்க. நானா சொல்றேன்?’’ ‘‘அதெப்படி?’’ ஆளைப் பிடிச்சுப் போயிட்டா...அப்புறம் எல்லாமே நல்லாருக்கும்பாங்க. ஆளைப் பிடிக்கலியோ நல்லாயிருக்கிறதைக்கூட மோசம்பாங்க...அதுதான் இந்த ஊர் வழக்கம் வாத்தியாரே...’’ என்றான் கோபால். முத்துக்குமரனுக்கு அந்த வழக்கம் வேடிக்கையாகவும், விநோதமாகவும் தோன்றியது. ஆனாலும் அவன் அது விஷயமாகக் கோபாலிடம் எதிர் வாதிடுவதற்கு விரும்பவில்லை. அன்று மாலையில் ஆறரை மணிக்குக் கோபால் முத்துக்குமரனை |