யும் மாதவியையும் உடனழைத்துக்கொண்டு ஓர் ஆங்கிலத் திரைப்படம் பார்க்கப் போனான். தியேட்டர்காரருக்கு முன்னாலேயே ஃபோன் பண்ணி - நியூஸ் ரீல் போட்டதும் உள்ளே நுழைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பாக்ஸில்’ போய்ப் படம் பார்த்துவிட்டுப் படத்தின் கடைசிக்காட்சி முடியுமுன்பே எழுந்துவர வேண்டியிருந்தது. இல்லையானால் கூட்டம் கூடிக் கோபாலைப் படம் பார்க்க விடமாட்டார்களென்று தோன்றியது. கோபாலின் இந்த நிலைமை முத்துக்குமரனுக்கு வியப்பை அளித்தது. பொது இடங்களில் சுதந்திரமாக நடக்க முடியாத அந்தப் புகழ் மனிதனைச் சிறைப்படுத்துவதை அவன் விரும்பவில்லை. கோபாலோ அதற்காகவே பெருமைப்படுவதாகத் தெரிந்தது. ‘‘ஆளைத் தன்னிச்சையாக நடக்க விடாத புகழ் என்னாத்துக்குப் பிரயோசனம்?’’ - என்று கோபமாகக் கேட்டான் முத்துக்குமரன். கோபால் அதற்குப் பதில் சொல்லுமுன் கார் பங்களாவை அடைந்து விட்டது. மூவருமே இறங்கினர். இரவுச் சாப்பாட்டை மூவரும் அங்கேயே முடித்துக் கொண்டபின் முத்துக்குமரன் தன் அவுட்ஹவுஸு க்கு வந்தான். ‘‘சாரிட்ட ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன்’’ - என்று கோபாலிடம் கூறிவிட்டு மாதவியும் முத்துக்குமரனோடு வந்தாள். அந்தக் குளிர்ந்த இரவில் அவள் உடன் நடந்து வர அவுட்ஹவுஸு க்குச் செல்லும்போது அவன் மனம் உற்சாகமாயிருந்தது. அவள் கை வளைகள் ஒலிக்கும் போது அதன் எதிரொலி அவன் மனத்தில் கேட்டது. அவள் சிரிக்கும்போது அதன் நாதம் அவன் இதயத்தில் புகுந்து கிறங்கச் செய்தது. இதமான குளிர் நிலவும் தோட்டத்தில் அந்த முன்னிரவு வேளையில் ‘நைட்குவின்’ செடி ஒன்று நட்சத்திரங்களை அள்ளிக் கொட்டியது போல் பூத்து வாசனை பரப்பிக் கொண்டிருந்தது. அந்த |