வாசனையும் குளிரும் அவன் மனத்தில் அநுராக கீதம் இசைத்தன. 5 நடந்து வரும்போதே அவளிடம் நிறையப் பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவுட்ஹவுஸ் படியேறி அறைக்குள் வந்ததும்...தயங்கி நின்றாள் மாதவி. அவளுடைய மிருதுவான சரீரம் அடுத்த கணம் முத்துக்குமரனுடைய அணைப்பில் சிக்கியது. ‘‘என்னை விடுங்க. நான் சொல்லிக்கொண்டு போவதற்குத்தான் வந்தேனாக்கும்...’’ ‘‘இப்படியும் சொல்லிக்கொண்டு போகலாமில்லையா?’’ -அவன் தன்னை அவனுடைய பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டாள். ஆயினும் அவள் உடனே அங்கிருந்து போக அவசரப்படவில்லை. மேலும் ஏதோ ஒப்புக்குச் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றாள். ‘‘உனக்கும் போக மனசு இல்லே! எனக்கும் உன்னை விட மனசு இல்லை. இப்படித்தான் உட்காரேன்...’’ ‘‘ஐயையோ மாட்டவே மாட்டேன். ஒரு நிமிஷத்திலே வரேன்னு சாரிட்டச் சொல்லிட்டு வந்தேன். சந்தேகப்படப் போறாரு; நான் உடனே வீட்டுக்குப் போகணும் -’’ முத்துக்குமரன் மறுபடியும் வளை குலுங்கும் அவளுடைய ரோஜாப்பூக் கைகளைப் பற்றினான். கடைந்து திரட்டிய பசுவெண்ணெய் போல் அந்தக் கைகள் மிக மென்மையாகவும் குளுமையாகவும் இருந்தன. ‘‘உன்னை விடவே மனசு வரவில்லை மாதவி’’- |