பக்கம் எண் :

66சமுதாய வீதி

கூறினான் முத்துக்குமரன். டைப் செய்வதற்கு முன் அவன் தன்னிடம் கொடுத்த
கையெழுத்துப் பிரதியை நிதானமாக ஒரு முறை படிக்கலானாள் மாதவி. படித்து
முடிந்ததும் முத்துக்குமரனை அவள் பாராட்டினாள்:

     ‘‘நல்லா வந்திருக்குங்க! கழைக்கூத்தாடிப் பெண் பாடறதாக ஒரு பாட்டு
எழுதியிருக்கீங்களே! அது ரொம்பப் பிரமாதம்...’’

     ‘‘அந்தப் பாட்டைத்தான் உன் குரலிலே ஒரு தடவை பாடேன்; மனசு
குளிரக் கேட்கிறேன்?’’

     ‘‘இப்ப நான் பாடினா அதுனாலே ஒரு அரைமணி நேரத்துக்கு வீணா
உங்க வேலை கெடுமே...?’’

     ‘‘உன் பாட்டை கேட்கிறதைவிட வேற வேலைகூட இருக்கா எனக்கு?’’

     - அவள் பாடத் தொடங்கினாள். தொண்டையைக் கனைத்துக் குரலைச்
சரி செய்து கொண்டு,
 

     ‘‘நெஞ்சின் எல்லையில் நீயாட
     நீள் கழையினில் நானாடுவேன்’’

     என்று அவள் பல்லவியை எடுத்தபோது தேன் வெள்ளம் மடை திறந்தது.
அவளே கதாநாயகியாகவும், அவனே கதாநாயகனாகவும் மாறி விட்டாற்
போன்ற ஒரு சூழ்நிலையை அந்தப் பாடல் அங்கே உருவாக்கிவிட்டது.
தன்னுடைய சொற்கள் அவளுடைய குரல் என்ற இங்கிதத்தில் அமுதமாகப்
பெருகி வருவதைக் கண்டு கட்டுண்டு போய் வீற்றிருந்தான் முத்துக்குமரன்.
அவள் பாடி முடித்த போது அமுதமழை பொழிந்து நின்ற மாதிரி இருந்தது.

     -பாடி முடிந்ததும் ஓடிச் சென்று ஒரு பூச்செண்டைத் தூக்குவது போல்
அவளைக் கட்டித் தூக்கினான் அவன், அவள் அவனைத் தடுக்கவில்லை.
அவனுடைய பிடியில் சுகம் கண்டவள் போல் இருந்தாள் அவள்.