| உங்ககிட்டே வந்து பக்கத்திலே நெருங்கிப் பேசறதுக்குப் பயப்பட்டாங்க. நான் ஒருத்திதான் தைரியமாகத் தேடிப் பக்கத்திலே வந்து அந்த மயக்கத்தை உங்ககிட்டவே ஒப்புக் கொண்டேன்...’’ ‘‘அடடே அப்படியா சங்கதி! இது தெரிஞ்சிருந்தா கொஞ்சம் அப்பவே பிகுவா, டெஸ்ட் பண்ணியிருப்பேனே? அத்தினி பெரிய தைரியசாலியா நீ?’’ ‘‘இல்லையா பின்னே? உங்களைப் போல இருக்கிற மாபெரும் தைரியசாலியையே அடையணும்னாக் கொஞ்சமாவது தைரியம் எனக்கு இருந்தாத்தானே முடியும்?’’ ‘‘சரி, அது போகட்டும்! பையன் ஒரு இலைதானே கொண்டாந்திருக்கான். இப்ப நீ எப்படிச் சாப்பிடுவே? இன்னொரு இலை கொண்டாரச் சொல்லட்டுமா? அல்லது டிபன் கேரியர்லியே சாப்பிடறியா?’’ ‘‘நீங்களே வேணும்னு ஒரு இலை கொண்டாரச் சொல்லியிருப்பீங்க..?’’ ‘‘சே! சே! நான் ஒண்ணும் சொல்லலே.’’ ‘‘என்ன பண்ணித் தொலைக்கிறது! இந்த இலையிலேயே சாப்பிட வேண்டியதுதான். காலையிலே காப்பி குடிக்கிறப்பவே அப்படித்தானே செஞ்சிங்க...? மனுஷாளை உங்களுக்கு அடிமையாக்கிறதிலே அத்தனை அகங்காரம் உங்களுக்கு, இல்லையா?’’ ‘‘அப்படிச் சொல்லாதே மாதவி! உன்னை என் மனத்தின் சௌந்தரிய ராணியாகக் கொலு வைத்திருக்கிறேன் நான். நீயாகவே ஏன் உன்னை அடிமையென்று சொல்லிக் கொள்ளுகிறாய்? அடிமை எங்காவது ராணியாகப் பதவி பெற முடியுமா?’’ ‘‘நீங்கள் எனக்கு ராணிப்பட்டம் கொடுத்திருக்கிறீர்களே...? அடிமைகளும் ராணியாக முடியுமென்பதைத்தானே இது காட்டுகிறது?’’ |