| - ஆதரவுடன் அவன் அருகில் உட்கார்ந்து பரிமாற அவன் சாப்பிட்டு மீதமிருந்த இலையிலேயே அவள் அன்று பகலில் சாப்பிட்டாள். அப்படி உண்ணும்போது அவளுடைய நாணத்தையும், அன்பையும், வசப்படும் ஓர் அடிமை போன்ற பிரியத்தையும் - தாங்கமுடியாத அளவு அவன் மனம் திடீரென்று சிறியதாகிவிட்டது போல உணர்ந்தான் அவன். அவ்வளவு மகிழ்ச்சிகளை, அவ்வளவு இனிய அநுபவங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு தாங்க மனத்தில் இடம் குறைந்துவிட்டதுபோல் மகிழ்ச்சிகளும் இனிமைகளும் பெரிதாகத் தோன்றின அவனுக்கு. சாப்பாடு முடிந்ததும் நாயர்ப்பையன் வந்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போனான். அவள் டைப் செய்வதற்காக உட்கார்ந்தாள். ‘‘இந்த விரல்களால் வீணையின் நரம்புகளில் இடைவிடாமல் எந்த இனிய பண்ணையாவது நீ வருடிக் கொண்டே இருந்தால் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். வீணை வாசிக்கவேண்டிய உன்னுடைய நளினமும், சாதுரியமும் நிறைந்த விரல்கள் டைப் அடிப்பதால் இந்த மிஷின் பாக்கியம் செய்ததாகிறது, மாதவி!’’ ‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இப்போது? என்னைப் புகழ்கிறீர்களா? அல்லது கேலி செய்கிறீர்களா? நான் வீணை வாசித்தாலும் டைப் அடிக்கிறது மாதிரிதான் இருக்கும் என்பதைச் சொல்லிக் கிண்டல் செய்கிறீர்களா? டைப் அடிக்கிற மாதிரி வீணை வாசித்தால் நரம்புகள் அறுந்து போகும். வீணை வாசிக்கிற மாதிரி டைப் அடித்தால் எழுத்துக்களே காகிதத்தில் பதியாது - ’’ ‘‘உனக்குத்தான் இரண்டு காரியத்தையுமே நல்லாச் செய்யத் தெரியுமே?’’ என்றான் முத்துக்குமரன். மாலையில் அவளையும் அழைத்துக் கொண்டு எங்காவது கடற் |