| கரைக்கோ கடை வீதிக்கோ போக வேண்டுமென்று ஆசையாயிருந்தது அவனுக்கு. அவளுடைய அன்பு என்ற இங்கிதத்தில் மூழ்கிக்கொண்டே உருவாக்கினால் அந்த நாடகம் மிகச் சிறப்பாக வாய்க்குமென்று தோன்றியது அவனுக்கு. முதற்காட்சி முழுமையையும் இரண்டாங் காட்சியில் சில பகுதிகளையும் அவன் எழுதி முடித்திருந்தான். பிற பகுதிகளை இரவில் தொடர்ந்து எழுதினால் காலையில் அவள் வந்து ‘டைப்’ செய்ய வசதியாயிருக்கும் என்று எண்ணினான் முத்துக்குமரன் - மூன்று மணியானதும் நாயர்ப்பையன் அவர்கள் இருவருக்கும் மாலைக் காபி சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தான். ‘‘இப்படி எங்கேயாவது வெளியிலே போய்ச் சுற்றிவிட்டு வரலாம்னு பார்க்கிறேன். நீயும் வர்றியா மாதவி?’’ ‘‘ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கிட்டீங்கனா வரேன்’’ ‘‘என்ன நிபந்தனைன்னு சொன்னா ஒப்புக்கொள்ள முடியுமா இல்லையான்னு பார்க்கலாம்...’’ ‘‘பீச்சுக்குப் போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருப்போம் - அப்புறம் வர்ர வழியிலே ராத்திரிச் சாப்பாடு எங்க வீட்டில... இப்பவே அம்மைக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடப் போறேன்...’’ ‘‘உங்க வீடு எங்க இருக்கு?’’ ‘‘சொந்த வீடு இல்லே; வாடகை வீடு தான். லாயிட்ஸ் ரோடிலே ஒரு பங்களா ‘அவுட்ஹவுஸ்’லே நானும் அம்மையும் இருக்கோம்...’’ ‘‘கோபாலைக் கூப்பிடலையா?’’ ‘‘அவரு வரமாட்டாரு...’’ ‘‘ஏன்?’’ ‘‘எங்க வீடு ரொம்பச் சின்னது. இன்னொருத்தரோட பங்களாவின் ‘அவுட்ஹவுஸ்.’ தவிர, நான் அவர் |