‘‘ஒருவேளை அவனோட கார் உன் வீட்டு வாசல்லே நிற்கிறதுகூட ஸ்டேட்டஸ் குறைவாயிருக்குமோ என்னவோ?’’ ‘‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை’’ - என்று முத்துக்குமரனுக்குப் பதில் கூறிவிட்டு ஃபோனில் நாயர்ப்பையனைக் கூப்பிட்டு மலையாளத்தில் பேசினாள் மாதவி. சில விநாடிகளில் அவுட்ஹவுஸின் முன் சிறிய ‘பியட்’ ஒன்று வந்து நின்றது. புறப்பட்டுக் கொண்டே அவளிடம் முத்துக்குமரன் ஒரு கேள்வி கேட்டான்:- ‘‘மாதவி உனக்கு மலையாளத்தில் எந்த ஊரு?’’ ‘‘மாவேலிக்கரை...’’ - என்று பதில் கூறினாள் அவள். கார் புறப்பட்டது. முதலில் தன்வீட்டில் போய்ச் சாப்பிட வருவது பற்றிச் சொல்லிவிட்டு அப்புறம் கடற்கரை செல்லலாமென்றாள் அவள். பிறப்பினால் மலையாளியாயிருந்தும் அதிக வித்தியாசம் தெரியாமல் அவள் தமிழ் பேசியதும் டைப் செய்ததும் அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தன. தமிழ் வசனத்தையே மலையாள வசனம் போலவும், தெலுங்கு வசனம் போலவும் மாற்றி உச்சரிக்கும் சில நடிகைகளை அவனறிவான். அப்படிப்பட்டவர்களிடையே மாதவி புதுமையாகத் தோன்றினாள் அவனுக்கு. 6 ஒரு பெரிய பங்களாவின் தோட்டத்தில் வலது ஓரமாக இருந்த சிறிய அவுட்ஹவுஸு க்கு மாதவி அவனை அழைத்துச் சென்றாள். வீட்டின் வரவேற்பு அறை, கூடம், சமையலறை யாவும் கச்சிதமாகவும் நவீனமாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் ஒரு மூலையில் டெலிபோன் இருந்தது. வீட்டில் மாதவியின் தாயையும் ஒரு வேலைக்காரியையும் தவிர வேறெவரும் இல்லை. மாதவி தன் தாயை முத்துக்குமரனுக்கு |