| குடும்பமொன்று அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தது. அந்த வெள்ளைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பல வண்ணப் பந்துக்களை (பீச் பால்) வீசி எறிந்தும் பிடித்தும், விளையாடிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரனும் மாதவியும் மணல் சுத்தமாக இருந்த ஒரு பகுதியாகத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். கடலும் வானமும், சூழ்நிலையும் அப்போது அங்கே மிக மிக அழகாயிருப்பதாக இருவருக்குமே தோன்றியது. திடீரென்று முத்துக்குமரன் மாதவியை ஒரு கேள்வி கேட்டான். ‘‘மாவேலிக்கரையிலிருந்து மெட்ராசுக்கு வந்து இந்தக் கலையிலே ஈடுபட வேண்டிய நிலை உனக்கு எப்போ ஏற்பட்டது?’’ திடீரென்று ஏன் அவன் இப்படித் தன்னைக் கேட்கிறான் என்று அறிய விரும்பியோ அல்லது இயல்பான தயக்கத்துடனோ - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். ‘‘சும்மா தெரிந்து கொள்ளலாம்னுதான் கேட்டேன். உனக்கு விருப்பமில்லைன்னாச் சொல்ல வேண்டாம்’’ - என்றான் அவன். ‘‘சேட்டன் - நல்ல வாலிபத்தில் இறந்து போனப்புறம் - அம்மையும் நானும் மெட்ராஸ் வந்தோம். சினிமாவுக்கு ‘எக்ஸ்ட்ராக்கள்’ சேர்த்துவிடும் ஆள் ஒருவன் எங்களை ஸ்டுடியோக்களில் நுழைத்துவிட்டான். அங்கே கோபால் சாரோடு பழக்கம் ஏற்பட்டது...’’ ‘‘பழக்கம்னா...?’’ - அவள் பதில் சொல்லவில்லை. அவள் முகம் கலவரமான மனநிலையைப் பிரதிபலித்தது. அவனும் மேலே அழுத்திக் கேட்கத் தைரியமற்றவனாக இருந்தான். சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. பின்பு அவளே மேலும் தொடர்ந்தாள்: |