| ‘‘நான் இந்த லயன்லே ஓரளவு முன்னுக்கு வந்து வசதியாயிருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம்.’’
‘‘ஊரிலே வேறே யாரும் இல்லையா?’’
‘‘அச்சனைப் பறிகொடுத்தப்புறம், சேட்டனும் போனபின் - அம்மையும் நானும் தான் எல்லாம்’’ என்றாள் அவள். குரல் கம்மியது.
அவளுடைய தமையன் ஒருவன் குடும்பத்துக்குச் சம்பாதித்துப் போடும் பருவத்தில் நல்ல வாலிப வயதிலே காலமாகிவிட்ட செய்தியை முத்துக்குமரன் அறிந்தான். அழகும், உடற்கட்டும். குரலும் மலையாளமாயிருந்தும் வித்தியாசம் தெரியாமல் இயல்பாகத் தமிழ் பேசும் திறமையும் சேர்ந்தே அவளுக்குத் தமிழகத்துக் கலையுலகில் இடம் தேடிக் கொடுத்திருக்கவேண்டும் என்பதையும் அவனால் அநுமானிக்க முடிந்தது. சராசரியாக ஒரு நடிகைக்கு இருக்க வேண்டியதைவிட அதிகமான இயற்கையழகு அவளிடம் இருந்தது. சென்னைக்கு வந்தவுடன் இருந்த நிலைக்கும், படிப்படியாக சினிமா எக்ஸ்ட்ராவாக மாறிய நிலைக்கும் நடுவே அவளுடைய வாழ்க்கை எப்படி எப்படிக் கழிந்திருக்கும் என்பதை அவளிடமிருந்தே அறியவோ, தூண்டித் துளைத்துக் கேட்கவோ அவன் விரும்பவில்லை. அப்படிக் கேட்பதால் ஒருவேளை அவளுடைய முகத்தில் புன்முறுவல் மறைய நேரிடுமோ என்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது. அவளுடைய மனத்தைப் புண்படுத்தும் அல்லது அவளைத் தர்ம சங்கடமான நிலையில் வைக்கும் எந்தக் கேள்வியையும் அவன் கேட்கத் தயங்கினான். எனவே பேச்சை வேறு திசைக்குத் திருப்பக் கருதித் தயாராகிக்கொண்டிருக்கும் நாடகத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவள் ஆவலோடு கேட்கலானாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ‘‘இந்த நாடகத்தில் நீங்களே என்னோடு கதாநாயகனாக நடித்தீர்களானால் நன்றாக இருக்கும்’’ - என்று | |
|
|