பக்கம் எண் :

76சமுதாய வீதி

சிரித்துக் கொண்டே அவனிடம் கூறினாள் அவள்.

     அவன் சிரித்தபடியே பதில் கூறலானான்:

     ‘‘நாடகமே கோபால் கதாநாயகனாக நடிப்பதற்காகத்தானே தயாராகிறது!
அடிப்படையிலே கைவைத்தால் அப்புறம் ஒன்றுமே நடக்காது...’’

     ‘‘இருக்கலாம். எனக்கென்னமோ நீங்கள் என்னோடு
நடிக்கவேண்டும்போல ஆசையாயிருக்கிறது.’’

     ‘‘நீ இப்படிக் கூறுவதையே நான் இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும்
கூற நினைக்கிறேன். நீ என்னோடு நடிக்க வேண்டிமென்றுதான்
ஆசைப்படுகிறாய்...நானோ உன்னோடு வாழ வேண்டுமென்றே
ஆசைப்படுகிறேன்.’’

     - இப்படிக் கூறும்போது அவன் உணர்ச்சி வசமாகி நெகிழ்ந்திருந்தான்.
பூப்போன்ற அவள் வலக்கையைத் தன் கையோடு பிணைத்துக் கொண்டு
பேசினான் அவன். வாழ வேண்டுமென்ற அவன் விருப்பத்துக்கு அப்படியே
அப்போதே இணங்கித் தன் மனத்தையும் உடலையும் அளிப்பவள்போல் அந்த
விநாடியில் இசைந்து இருந்தாள் அவள். அவளுடைய மௌனமும், இசையும்,
இணக்கமும், நாணமும், புன்னகையும் அவனுக்கு மிகமிக அழகாயிருந்தன.

     இருட்டி வெகுநேரமான பின்பும் அவர்கள் கடற்கரையிலிருந்து
எழுந்திருக்கவே இல்லை.

     ‘‘சாப்பாடு ஆறிப்போகுமே! புறப்படலாமா?’’என்று அவள்தான் முதலில்
நினைவூட்டினாள். அவன் குறும்புத்தனமாக சிரித்துக்கொண்டே அவளுக்கு
மறுமொழி கூறினான்.

     ‘‘சில விருந்துகள் மிக அருகிலிருக்கும்போதே வெகு தொலைவிலிருக்கும்
வேறு சில விருந்துகளை மறந்துவிடத்தான் முடிகிறது...’’