| தில் கட்டிடங்களும், சாலைகளும், மரங்களும் மங்கலாகத் தெரிந்தன. அதிகம் நனைந்து விடாமல் போய்ச் சேர வசதியாக எழும்பூர் நிலையத்துக்கு நேர் எதிரே இருந்த ஒரு லாட்ஜில் போய் இடம் பிடித்துத் தங்கினான் முத்துக்குமரன். முன்பு அவனோடு நாடக சபாவில் ஸ்திரீ பார்ட் போட்ட பையன் ஒருவன் அப்போது சென்னையில் பெரிய நடிகனாக இருந்தான். கோபாலசாமி என்ற பெயருடைய அவனுக்கு இப்போது ‘கோபால்’ என்று பெயர் சுருங்கியிருந்தது. குளித்து உடை மாற்றிக்கொண்டு காபி குடித்த பின் கோபாலுக்கு ஃபோன் செய்ய எண்ணியிருந்தான் அவன். அந்த லாட்ஜில் எல்லா அறைகளிலும் டெலிபோன் கிடையாது. லாட்ஜ் ரிஸப்ஷனில் மட்டுமே ஃபோன் உண்டு. தன்னுடைய காரியங்களை எல்லாம் முடித்துக்கொண்டு அவன் ஃபோனுக்காக ரிஸப்ஷனுக்கு வந்தபோது மணி காலை பதினொன்றாகியிருந்தது. டெலிபோன் டைரக்டரியில் எவ்வளவோ தேடியும் நடிகன் கோபாலின் நம்பர் கிடைக்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் போகவே ரிஸப்ஷனில் உட்கார்ந்திருந்த ஆளிடம் கோபாலின் நம்பரைப் கேட்டான் முத்துக்குமரன். அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு அவர் இங்கிலீஷில் பதில் கூறினார். சென்னையில் அவன் இந்தப் புதுமையைக் கண்டான். தமிழில் கேட்பவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்பவர்களும், ஆங்கிலத்தில் கேட்பவர்களுக்குத் தமிழில் மட்டுமே பதில் சொல்லத் தெரிந்தவர்களுமாகக் கிடைத்தார்கள். நடிகன் கோபாலின் நம்பர் டெலிபோன் டைரக்டரியில் ‘லிஸ்ட்’ செய்யப்பட்டிராது என்பது அவர் கூறிய பதிலிலிருந்து அவனுக்குத் தெரிந்தது. சில விநாடிகளுக்குப்பின் டெலிபோன் மூலமே விசாரித்து |