| - இப்படிக் கோபால் கேட்ட தொனியும் - சிரித்த சிரிப்பும் விஷமமாகத் தென்படவே - முத்துக்குமரன் ஓரிரு விநாடிகள் பதில் சொல்லாமலே மௌனம் சாதித்தான். ‘‘உன்னைத்தான் கேட்கிறேன் வாத்தியாரே? மாதவிகிட்ட மணிக்கணக்கா உட்கார்ந்து பேசினப்புறம் எங்கிட்டப் பேசறதுக்குப் பிடிக்கலியா? பதில் சொல்ல மாட்டேங்கறியே?’’ - இந்த இரண்டாவது கேள்வி இன்னும் விஷமமாகத் தோன்றியது. கேள்வியில், ‘என்னிடம் சொல்லிக்கொள்ளாமலும், கேட்காமலுமே நீங்களாக வெளியில் சுற்றுகிற அளவு வந்துவிட்டீர்களே’ என்று வினாவுகிற தொனியும் இருந்ததை முத்துக்குமரன் கண்டான். மேலும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது நன்றாக இராது என்ற முடிவுடன், ‘‘யார் சொன்னாங்க? சும்மா வெளியிலே போய்ச் சுற்றி விட்டு வராலாம்னு தோணிச்சு போயிட்டு வந்தோம்’’ - என்றான் முத்துக்குமரன். பேச்சு இவ்வளவோடு நிற்கவில்லை; தொடர்ந்தது. ‘‘அது சரி நீயோ, மாதவியோ எங்கிட்டச் சொல்லாட்டியும் எனக்குத் தெரியாமப் போயிடும்னு பார்த்தியா வாத்தியாரே!’’ ‘‘தெரிஞ்சதுக்காக இப்ப என்ன செய்யணும்கிறேடா கோபாலு? ஏதாவது சிரசாக்கினையா என்ன?’’ ‘‘சிரசாக்கினைக்கு எல்லாம் கட்டுப்படற ஆளா நீ?’’ ஒருவருக்கொருவர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வது போலவே பேச்சுத் தொடர்ந்தாலும் - இரண்டு பேருடைய பேச்சுக்கு நடுவே வேடிக்கையல்லாத ஏதோ ஒன்று நிச்சயமாக இடறுவது தெரிந்தது. பேசிக்கொண்டிருந்த இருவருமே அப்படி ஒன்று நடுவே இடறுவதை உணர்ந்தார்கள். ஆனாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் பரஸ்பரம் நாசூக்காகவும் சுமுகமாகவும் சிரித்துப் பேசிக் |