| ஒருவர் எங்கே போகிறார் வருகிறார், யாரோடு பேசுகிறார் என்றெல்லாம் - தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவரிடம் விசாரிப்பவன் எவ்வளவிற்குப் பண்புள்ளவனாக இருக்க முடியும்? அப்படி விசாரிக்கப்படும் நிலைமைக்கு ஆளான விருந்தினனைப் பற்றி அந்த டிரைவர் தான் எவ்வளவு மதிப்பாகவும் மரியாதையாகவும் நினைப்பான் என்றெல்லாம் சிந்தனை ஓடியது முத்துக்குமரனுக்கு. ஒருவேளை கோபால் இரவிலேயாவது, காலையிலாவது மாதவிக்கே ஃபோன் செய்து விசாரித்திருப்பானோ என்று அவன் நினைத்தான்; அந்த நினைப்பு சாத்தியமில்லை என்பதும் உடனே அவனுக்கே தோன்றியது. மாதவிக்குப் கோபாலே ஃபோன் செய்து விசாரித்திருந்தாலும் கூட அவள் தன்னையே எச்சரித்து அனுப்பியிருந்த நிலையில் கோபாலுக்கு ஒன்றும் பிடி கொடுத்துப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்று நம்ப முடிந்தது. திடீரென்று கோபால் புரியாத புதிராகியிருப்பது போல் முத்துக்குமரனுக்குத் தோன்றியது. ‘என்னுடைய செலவுகளுக்கு நான் திண்டாடக் கூடாது என்று குறிப்பறிந்து ஆயிரம் ரூபாய் பணத்தை உரையிலிட்டுக் கொடுத்தனுப்புகிற இந்த நண்பன் ஒரு சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படிக் கீழ்த்தரமாக இறங்கிப் போகிறான்; நான் வெளியே உலாவப் போகவோ, மாதவி தன் வீட்டுக்கு என்னைச் சாப்பிட அழைக்கவோ உரிமையில்லையா என்ன? இதற்காக ஏன் இவன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்கிறான்? இது ஒரு பெரிய விஷயமாக ஏன் இவனுக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இவனைப் பற்றி இவனே இரகசியம் என்று நினைத்துக் கொள்கிற எந்த விஷயங்களையாவது மாதவி என்னிடம் கூறியிருப்பாளென்று சந்தேகப்படுகிறானா? அந்தச் சந்தேகத்தை நேரடியாகக் கேட்டுத் தீர்த்துக்கொள்ள முடியாமல்தான் சுற்றி வளைத்து இப்படியெல்லாம் கேட்கிறானோ?’- |