பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி85

     என்றெல்லாம் முத்துக்குமரனின் மனத்தில் சிந்தனைகள் ஓடின. காலைச்
சிற்றுண்டியை பையன் கொண்டு வருவதற்குள் குளித்து உடை மாற்றிக்கொண்டு
வந்துவிடலாம் என்று ‘பாத்’ ரூமக்குள் நுழைந்தான் அவன். பல் துலக்கும்
போதும், நீராடும் போதும், உடம்பைத் தேய்த்துக் கொள்ளும் போதும்
நண்பனைப் பற்றிய அதே சிந்தனை தொடர்ந்தது.

     ‘ஷவரை’ மூடிவிட்டுத் துடைத்துக்கொண்டு, பாத்ரூமை அடுத்த பகுதியில்
உள்ளே இருந்த டிரெஸ்ஸிங் டேபிளுக்கு முன் அவன் வந்தபோது அறைக்கு
வெளியில் மேஜையில் ‘டைப்’ அடிக்கும் ஒலியும், வளைகள் குலுங்கும் நாதமும்
கேட்டன. மாதவி வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான்.
தனக்குக் காத்திராமலும், தன்னை எதிர் பார்க்காமலும் வந்தவுடனே அவளாக
டைப் செய்யத் தொடங்கியது என்னவோ விட்டுத் தெரிவது போல் தோன்றியது
அவனுக்கு.

     உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் மாதவி அமைதியாக
இருந்ததைக் கண்டான். தான் வெளியே வந்ததும் அவள் டைப் செய்வதை
நிறுத்திவிட்டுத் தன்னிடம் பேசாமல் - தொடர்ந்து அமைதியாக டைப் செய்து
கொண்டே இருந்ததைக் கண்டதும் நிலைமையை அவனால் உய்த்துணர
முடிந்தது. கோபால் அவளிடம் ஏதோ பேசியிருக்கக் கூடுமென்றும் அவனுக்குப்
புரிந்தது. கோபால் பேசியிராத பட்சத்தில் திடீரென்று அவள் அவ்வளவு
செயற்கையாக மாற வழியில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது. அருகே
சென்று அவள் டைப் செய்து போட்டிருந்த தாள்களைத் கையிலெடுத்தான்
முத்துக்குமரன். அப்போதும் அவள் அவனிடம் பேசவில்லை; தொடர்ந்து டைப்
செய்து கொண்டிருந்தாள்.

     ‘‘என்ன மாதவி! எதுவும் பேசக்கூடாதென்று கோபமா!

     ச-6