மனோன்மணீயம்
6

ஆண்டில் ஒரு கட்டிடமுங் கட்டி முடித்தார்கள். அதற்குச் சுந்தரம் பிள்ளையவர்கள் ரூ. 500 நன்கொடை யளித்திருக்கிறார்கள். அச்சபைக் கட்டிடம் இன்றும் திருவனந்தபுரத்தில் நிலவி விளங்குகின்றது. கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் நடை பெற்றுவந்த பரிசளிப்புகட்கு அவர்கள் நன்கொடை வழங்கி வந்ததாகத் திருவிதாங்கூர் அரசியல் கல்வி யிலாகா அறிக்கைகள் பகருகின்றன. 1886-ம் ஆண்டு, அவர் தந்தையார் பெருமாள் பிள்ளையவர்கள் மண்ணுலகு நீத்து விண்ணுல கெய்தினர்.

பிள்ளையர்கள் தமிழிலக்கிய வரலாற்றாராய்ச்சியிலும், சமய நூலாராய்ச்சியிலும், திருவிதாங்கூர் பண்டைய அரசர் கால ஆராய்ச்சியிலும் பெரிதும் உழைத்து, அவ்வப் பொருள்கள் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆங்கிலத் திங்கள் இதழ்களில் எழுதி வந்தார்கள். தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும் பிள்ளையவர்கள் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தி யிருக்கின்றார்கள். இதுவுமன்றி, திருவிதாங்கூர் அரசியலாரால் அமைக்கப்பட்ட பொதுமக்கள் சொற்பொழிவு சங்கத்(Public Lecture Committee)தில் அமைச்சரா யமர்ந்து, அதிலும் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தி யிருக்கின்றார்கள். பிள்ளையவர்கள் தம் மேனாட்டு அறிவு நூலாராய்ச்சித் திறத்தினாலே, மேனாட்டுப் பெரியாருடைய விழுமிய கருத்துக்களை நமது நாட்டாருக்கும், நம் நாட்டு அறிவு நூலாராய்ச்சித் திறத்தினாலே நம் நாட்டு முன்னோருடைய சிறந்த கருத்துக்களை மேனாட்டு அறிஞர்கட்கும் அறிவுறுத்தக்காரணராயிருந்திருக்கிறார். இவரெழுதிய நூற்றொகை விளக்கம், 1888-ம் ஆண்டு மேத்திங்கள் அச்சியற்றி வெளியிடப்பட்டது. அந்நூல் முகவுரையில் ஆசிரியரவர்கள் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்கள்:'தற்கால நிலைமைக்கேற்பச் சாத்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாமென்பதும், அவற்றின் முக்கிய முறைமையும் பொருளும் என்னவென்பதும் ஆம்வகை எடுத்து விளக்குவதே இந்நூல் பொதுவியலின் தலைமையான உத்தேசம். இது திருவிதாங்கோட்டு கவர்ன்மெண்டாருடைய நூதன பிரசங்க ஏற்பாட்டின்படி திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக்கப்பட்டது' என்பதாகும். தமிழ் உரைநடை நூலுக்கு இஃது ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.