தான் நெடுங்காலமாகக் கொண்டிருந்த அபிலாஷத்தைப் பூர்த்திப் படுத்திக் கொண்டான். 11. ஆயினும் அவ்வளவோடு நில்லாமல், தன்னை யறியாமல் முனிவர் வகுத்த கள்ளவழியைக் கண்டறிய வேண்டு மென்று விருப்புற்று, அது அவர் வந்த அன்றே தமக்காகப் பெற்றுக் கொண்ட அறைக்குச் சம்பந்தப் பட்டிருப்பதே இயல் பென ஊகித்து, அவ்வறையிற் சென்று நோக்கி அச்சுருங்கையைக் கண்டு பிடித்து அவ்வழியே போய் வெளியேறிப் பார்க்குங்கால், சத்துரு பாசறை அருகே தோன்றிற்று. அன்று பகலில் தன் மகனுக்குச் சண்டையில் நேரிட்ட மோசடி போலத் தனக்கும் இனி வரக் கிடக்கும் கொடும் போரில் உட்பகையாலோ வெளிப்பகையாலோ யாதேனும் அபாயம் நேரிட்டு விடலா மென்ற பயத்தாலும், மனோன்மணி விவாகம் எப்படியும் அன்றிரவே நடந்தேறுமென்ற துணிவாலும், நடந்தேறில் ஜீவகனது பிரீதியால் சித்திக்கத் தக்கது வேறொன்று மில்லையென்ற உறுதியாலும், கோட்டைக்குத் திரும்ப வேண்டு மென்ற எண்ணம் விடுபட, தான் வருந்திக் கண்டு பிடித்த கற்படையைச் சேரனுக்குக் காட்டி அவ்வழியே அவனை அழைத்துச் சென்று யாதொரு உயிர்ச் சேதத்திற்கு மிட மில்லாமல், பாண்டியனையும் அவன் கோட்டையினையும் சுலபமாகப் பகைவன் கையில் ஒப்பித்து விட்டால், ஒருகுடம் ஜலத்திற்கும் ஒரு பூமாலைக்குமாகச் சமரை நிறுத்தித் தன்னூருக்குத் திரும்ப எண்ணின சேரன், தன்னையே முடி சூட்டிச் சிங்காதனம் சே்ாக்கா தொழிவனோ என்ற பேராசை பிடர்பிடித்துந்தவும் ஊழ்வலி யொத்துநிற்கவும் செய்ததினால், அத்துரோகியாகிய குடிலன் மெள்ள மெள்ளப் பாசறை நோக்கிப் போகவே, கனாவில் மனோன்மணியினது உருவங்கண்டு காமுற்ற நாள் முதலாக யாதொன்றிலும் மனஞ் செல்லாதவனாய் இரவெல்லாம் நித்திரை யற்றுத் தனியே திரிந்து வருந்தும் புருடோத்தமனை நடுவழியிற் சந்தித்துக் கொண்டான். அதுவும் தனது பாக்கியக் குறியாகவே மதித்து மகிழ்ந்த குடிலன், எதிர்ப்பட்ட சேரனிடம் தனது துரோக சிந்தனையை வெளிப்படுத்த, தன்னயங் கருதாச் சதுரனாகிய புருடோத்தமன், தனது சேவகரைக் கூவிக் குடிலன் காலிலும் கையிலும் விலங்கிடுவித்து ‘’வீரமே யுயிராகவுடைய வஞ்சி வேந்தருக்கு வெற்றி யன்று விருப்பு, இவ்வித இராஜ துரோகிகளைக்
|