வழைக்கும் எல்லை, குடிலன் வழிகாட்டக் கற்படை வழி வந்த புருடோத்தமனும் முனிவ ரறையில் வந்து சேர்ந்து அடு்த்த அறையாகிய மணவறையில் நடக்கும் ஆகோஷம் என்ன வென்று நோக்கவே, தன் திரைவிட்டு, வெளிவந்து பலதேவ னெதிரே மணமாலையும் கையுமாய் சித்திரப் பிரதிமை போல உணர்வற்றுச் செயலற்று நின்ற தன் காதலியாகிய மனோன்மணியைக் கண்ணிரண்டும் களிக்கக் காணலும், பள்ளத்துட் பாயும் பெரு வெள்ளம் போல் அவரப் பெருகி யீர்த்தெழ, திடீரென்று கடிதிற் குதித்து யாரும் அறியாது சபையுட் புகுந்து கையற்ற சோகத்தால் மன மிறந்து நின்ற மனோன்மணி, தன் கண்முன் சென்று நின்றனன். தன்னுள்ளத் திருந்த தலைவன் இங்ஙனம் பிரத்தியக்ஷப்படலும் அக்கணமே ஆனந்த பரவசப்பட்டு மனோன்மணி, தான் கைக்கொண்ட மணமாலையை அவன் கழுத்தொடு சேர்த்துத் தற்போத மிழந்து அவன் தோண்மேல் வீழ்ந்து மூர்ச்சை யாயினள். இங்ஙனம் அயலான் ஒருவன் சபையுட் புகுந்ததும் மனோன்மணி அவனுக்கு மாலை சூட்டி மூர்ச்சித்ததும் கண்டு ஜீவகனாதியர் திடுக்கிட்டுச் சூதெனக் கருதிப் பொருதற் கெழுங்கால், சுந்தர முனிவர் கையமைத்துச் சமாதானம் பிறப்பிக்கப் புருடோத்தமன், குடிலன் தன்னிடத்தில் வந்து கூறிய துரோகச் சிந்தனையும் தான் அதற்கிசையாது அவனையே கால் யாப்பிட்டு ஜீவகனிடம் ஒப்புவிக்கக் கொணர்ந்தமையும் கூறிக் குடிலனை விலங்கும் காலுமாகச் சபைமுன் நிறுத்திவிட்டு, தனக்குயிர்நிலையா நின்ற மனோன்மணியுடன் தன் பாசறைக்கு மீள யத்தனிக்கு மளவில், சுந்தரமுனிவர் ஆஞ்ஞையால் ஜீவகன் மனந்தெளிந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த அதுகண்ட யாவரும் கண்படைத்த பெரும் பயனடைந்து அருட்டிறம் புகழ்ந்து ஆனந்தம் அடைந்தனர். 14. இதுவே இந்நாடகத்தின் வரும் கதையின் சுருக்கம். இக்கதையை வேண்டுழி வேண்டுழி விரித்து ஆங்கிலேய நாடக ரீதியாக ஜீவகனாதியராகிய கதா புருஷர்களுடைய குணாதிசயங்கள் அவர் அவர் வாய்மொழிகளால் வெளிப்படும் செய்திருப்பதுமன்றி, ‘’வாழ்த்து வணக்கத்துடன்’’ தொடங்கி, ‘’நாற்பொருள் பயக்கும் படை’’ யினைக் கூடிய அளவும் தழுவி, ‘’தன்னிகரில்லாத் தலைவனையும்’’ தலைவியையும் உடைத்தாய், ‘’மலைகடனாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம்’’ என்றின்னனவும் பிறவும் ஏற்
|