| ஒருபிழைக்கா அரனார்முன் னுரையிழந்து விழிப்பாரேல் | |
| அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. | (2) |
| சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் | |
| முதுமொழிநீ யநாதியென மொழிகுவதும் வியப்பாமே. | (3) |
| வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு | |
| காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. | (4) |
| கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் | |
| உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே | (5) |
| தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை | |
| மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. | (6) |
| வடமொழிதென் மொழியெனவே வந்தவிருவிழியவற்றுள் | |
| கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே | (7) |
| வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் | |
| கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். | (8) |
| கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள் | |
| வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார். | (9) |
| பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ | |
| எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்கற்பனையே. | (10) |
| வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் | |
| உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி. | (11) |
| மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் |
| கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ. | (12) |