பக்கம் எண் :

879
தற்காலத்தில் பாடப்படும் இராகங்கள் இன்னின்ன சுருதிகளில் வருகின்றனவென்பதற்கு திருஷ்டாந்தம்.

அது போலவே சங்கீதத்திலும் தாங்கள் படிக்கும் இன்னிசைகளில் சுரம் இன்ன தென்றும் இன்ன வகுப்பைச் சேர்ந்த தென்றும் கண்டுகொள்வதற்காக, ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்ற அளவுகளை உபயோகித்திருக்கிறதாகத் தெரிகிறது.

பாலை என்னும் சொல் பகுக்கப்பட்டது என்றும் பாடற் சுவையினொன்று என்றும் பொருள் படுகிறது. இதனால் பாடப்படும் பண்களின் ஓசைக்கேற்ற விதமாய் நாலு விதமான பிரிவுகள் அமைந்திருந்தார்களென்று தெளிவாகக் காண்கிறோம்.

இவற்றுள் ஆயப்பாலை என்பது ஒரு ஸ்தாயியில் ச ப,ச ம முறையாய் வரும் பன்னிரண்டு சுரங்களில் கானம் பண்ணப் படுவதாம்.

வட்டப்பாலை யென்பது ஸ்தாயியில் பன்னிரண்டான சுரங்கள் இரண்டு இரண்டு அலகுடையதாய் இருபத்துநான்காய்ப் பிரிக்கப்பட்டு அதில் விளரி கைக்கிளையைப் போல் இணை கிளையாய் வரும் இரண்டு சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கானம் பண்ணும் முறையாம். மற்றும் சுரங்கள் யாவும் ஆயப்பாலைச் சுரங்களே.

திரிகோணப்பாலை யென்பது இணை கிளையாய் வரும் சுரங்களில் வட்டப்பாலை முறைப்படி அரை அலகு குறைத்துப் பாடுவதாம். மற்றும் சுரங்கள் யாவும் ஆயப்பாலைச் சுரங்களே.

சதுரப்பாலை என்பது வட்டப்பாலை முறைப்படியே இணைகிளையாய் வரும்சுரங்களில் (1/4) அலகு சம்பந்தமாக அதாவது (1/4),(3/4),1(1/4),1(3/4) போன்ற நுட்பமான சுருதிகள் சேர்ந்து வருவது. மற்றும் சுரங்கள் யாவும் ஆயப்பாலையில் வழங்கி வரும் சுரங்களே. இதனால் எல்லாச் சுரங்களும் தங்கள் சுத்த சுர நிலையை இழந்து நுட்பமான சுருதிகள் சேர்ந்து வரவேண்டுமென்பது கருத்தல்ல. ஆனால் ஒரு ஆரோகணத்தில் ஜீவ சுரமாகவும் அவரோகணத்தில் ஜீவசுரமாகவும் வழங்கும் இரண்டு சுரங்கள் மாத்திரம் 1 அலகு,(1/2) அலகு (1/4) அலகு போன்ற நுட்பமான சுருதிகளைச் சேர்த்துக் கொண்டு வரும். ஆகையினால் மேற்காட்டிய நாலுவிதமான பாலைகளின்படியே இராகங்களைக் குறித்துக் கொள்ளுவது அடியில் வரும் 1, 2, 3, 4 அட்ட வணைகளில் மிகச் சுலபமாய் அறிந்து கொள்ளக் கூடியதென்று தோன்றுகிறது, அதில்,

(1) ஆயப்பாலையில் (1/2)அரை அரையான பன்னிரு சுரங்களில் பாடப்படும் இராகங்களும்,

(2) வட்டப்பாலையில் (1/4) கால் சுரங்கள் சேர்ந்து வரும் இராகங்களும்,

(3) திரிகோணப்பாலை அதாவது (1/8) அரைக்கால் சுரங்கள் சேர்ந்து வழங்கும் இராகங்களும்,

(4) சதுரப்பாலை அதாவது (1/16) வீசம் சுரங்கள் சேர்ந்து வழங்கும் இராகங்களும்,

(5) தேசிகம் அதாவது மார்க்க முறை மீறி கர்நாடகமாகவும் இந்துஸ்தானியாகவும் வரும் இராகங்களும் காணலாம்.