பக்கம் எண் :

878
கருணாமிர்த சாகரம் முதல் புஸ்தகம் - நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஒருஸ்தாயியிய்ல 22 சுருதிகள் அல்லது 24 சுருதிகளிருக்க வேண்டுமென்று எனக்குப் பல விதத்திலும் தோன்றி அரிகேசவநல்லூர் மகா---ஸ்ரீ முத்தையா பாகவதர் அவர்களையும் தஞ்சாவூர் வைணீக வித்வான் மகா---ஸ்ரீ வேங்கடாசலமையர் அவர்களையும் வைத்துக் கொண்டு பாடியும் வீணையில் வாசித்தும் சில இராகங்களைப் பரிசீலனை செய்து கொண்டு வருகையில், பெரும்படியாய் 24 சுருதிகளில் குறிக்க நேரிட்டது. அப்படிக் குறித்தாலும், இரண்டு வருடங்களுக்குப் பின் பிரம மேளத்தைப் பற்றிச் சொல்லும் நூல் மகா---ஸ்ரீ முத்தையா பாகவதர் மூலமாக எனக்குக் கிடைக்கும் வரையும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் வர வேண்டுமென்ற என் அபிப்பிராயத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தஞ்சாவூர் அரண்மனை சரஸ்வதி மஹாலில், 24 சுருதிகளின்படி செய்யப்பட்ட மேளாதிகார லக்ஷணம் என்னும் நூல் கிடைக்கும் வரையிலும் மகா---ஸ்ரீ வீணை வேங்கடாசலமையரவர்கள் மேற் சொல்லிய நூலை நம்பவில்லை. ஆனாலும் அதைப் பார்க்கிலும் நுட்பமாயிருக்க வேண்டுமென்ற எண்ணம் வளர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் வருகின்றனவென்று சொல்லுகிற காலத்தில் சங்கீத வித்வான்களிற் சிலர் ஆட்சேபிக்கவும் குதர்க்கம் செய்யவும் பரிகாசம் பண்ணவும் ஆரம்பித்தார்கள்.

அதோடு தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தில் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தானிருக்கின்றனவென்றும் 53 சுருதிகள் வருகின்றனவென்றும் வாதிக்கவும் செய்தார்கள். இதனால் கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளை விசாரிப்பதில் அவர்களின் உதவிபெறக்கூடாமற் போய்விட்டது.

ஆகையினால் கர்நாடக சங்கீதத்தில் கூடியவரை பயிற்சியும், இங்கிலீஷ் மியூசிக்கில் Trinity college London கலாசாலையின் the theory of music Higher Local என்ற ஏழாவது பரிட்சையில் 1913-ல் தேர்ச்சியும் பெற்ற எனது குமாரத்தி மரகதவல்லி அம்மாளின் உதவியினால் நுட்பமான சுரங்களைப் பலகாலம் ஆராய்ச்சி செய்யும்படி நேரிட்டது.

பூர்வ தமிழ் மக்கள் பாடிவந்த முறைப்படியே அட்டவணைகள் பிரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. ஆரோகணத்தில் ஒரு சுரமும் அவரோகணத்தில் வேறொரு சுருமுமாக வரும் தேசிக இராகங்களையும் சில இந்துஸ்தான் இராகங்களையும் 5-வது அட்டவணையில் காட்டியிருக்கிறேன். தென்னிந்திய சங்கீதத்தின் மார்க்க விதியின்படி வரக்கூடிய சில இராகங்கள் திஷ்டாந்தமாக 1, 2, 3, 4 வது அட்டவணைகளிற் காட்டப்பட்டுள்ளன.

தமிழ்மக்கள் இசைத்தமிழில் மிகத்தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார் களென்றும் மிக நுட்பமான சுருதிகளையும் வழங்கி வந்திருக்கிறார்களென்றும் நாளது வரையும் பாடப்படும் இராகங்கள் பூர்வகாலத்திலிருந்தவை யென்றும் அவைகள் பல விதத்திலும் பெயர் மாற்றப்பட்டுத் தற்காலம் வழங்கி வருகின்றன வென்றும் பார்த்திருக்கிறோம்.

தானிய வியாபாரம் செய்வோரும் பலசரக்கு விற்போரும் மற்றும் வியாபாரிகளும் கொள்வினை கொடுப்பனைகளில் எவ்வித ஆக்ஷேபனையும் உண்டாகாதிருக்கும்படி ஒரு (1) படி, அரைப் (1/2) படி, கால் (1/4) படி, அரைக்கால் (1/8) படி, வீசம் (1/16) படி முதலிய முகத்தல் அளவு கருவிகளையும் ஒரு (1) பலம், அரைப் (1/2) பலம், கால் (1/4) பலம், அரைக்கால் (1/8) பலம், வீசம் (1/16) பலம் போன்ற எடுத்தல் அளவு கருவிகளையும் இவை போன்ற பல கணக்குகளையும் வழங்கி வந்திருக்கிறார்கள் என்றும் நாளது வரையும் அவை நிலைத்திருக்கின்றன என்றும் காண்கிறோம்.